மத்திய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அதிக ஊழல் புகார்கள் பதிவானதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, கடந்த 2022-ம் ஆண்டில் துறைரீதியாக பதிவான மொத்த ஊழல் புகார்களின் எண்ணிக்கை 1,15,203. இதில் 85,437 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 29,766 புகார்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 22,034 புகார்கள் 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
மத்திய அமைச்சகங்களில் அதிகபட்சமாக உள்துறை அமைச்சகப் பணியாளர்களுக்கு எதிராக 46,643 புகார்கள் பதிவாகின. ரயில்வே துறையில் 10,580 புகார்களும், வங்கித் துறையில் 8,129 புகார்களும் பதிவாகின.
உள்துறை அமைச்சகப் பணியாளர்களுக்கு எதிரான புகார்களில் 23,919 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 22,724 புகார்கள் நிலுவையில் உள்ளன. ரயில்வேயில் 9,663; வங்கிகளில் 7,762 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
டெல்லி அரசு ஊழியா்களுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற 7,370 ஊழல் புகார்களில் 6,804 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறையில் 4,710 புகார்களில் 3,889 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தில் 4,304 புகார்களில் 4,050 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தில் 4,236 புகார்களில் 4,016 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தில் 2,617 புகார்களில் 2,409 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 2,150 புகார்கள், பாதுகாப்பு அமைச்சக பணியாளர்களுக்கு எதிராக 1,202 புகார்கள், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித் துறை அதிகாரிகளுக்கு எதிராக 1,101 புகாா்கள் பதிவாகியுள்ளது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/more-corruption-complaints-against-union-home-ministry-employees-corruption-vigilance-commission-informs.html