ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

பாதயாத்திரை அல்ல.. பாதி யாத்திரை… – விஜய் வசந்த் எம்.பி பேட்டி!

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பாதயாத்திரை அல்ல பாதி பாதி யாத்திரை என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

வசந்த் அண்ட் கோ சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12.ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மறைந்த வசந்தகுமார் மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-“கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு வசந்த் அன்கோ சார்பில் பரிசளிப்பு விழா எனது தந்தை வசந்தகுமார் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அந்த நிகழ்வு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்து வரும் ஆண்டுகளில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இதைப்போன்று பரிசுகள் வழங்குவதற்கு ஆலோசித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்த வழங்க வேண்டும் என்பதற்காக அவர்களது திறமையை வெளிகொண்டுவரும் வகையில் விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல.. அது பாதி யாத்திரை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவிலுள்ள மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் நடை பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களின் எண்ணங்களை அவர் புரிந்து கொண்டார். அது பாதயாத்திரை.

ஆனால் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல. ஒரு சில பகுதிகளில் நடந்து விட்டு மற்ற பகுதிகளில் செல்லாமல் இருப்பது பாதி பாதி யாத்திரை. இதன் மூலம் அவர் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது.” என கூறினார்.


source https://news7tamil.live/conducting-annamalai-is-not-a-pilgrimage-it-is-half-a-pilgrimage-vijay-vasanth-mp-interview.html