மணிப்பூரை போல தமிழ்நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணவர்களுக்கான
வேதியியல், விலங்கியல், இயற்பியல், தாவரவியல் என நான்கு பிரிவுகளைக் கொண்ட
ஆய்வகங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று காலை எதிர்பாராத விதமாக விலங்கியல்
ஆய்வகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அங்குள்ள மைதானத்தில்
விளையாடி கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் வள்ளியூர் தீயணைப்பு துறைக்கு தகவல்
அளித்தனர். அதன் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர்
பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தீயை அணைத்தனர்.
இத்தீ விபத்தில் ஆய்வகத்தில் இருந்த அனைத்து விதமான தளவாடப் பொருட்கள்
உபகரணங்கள், மாணவர்களின் பயிற்சிக்கான கெமிக்கல் என அனைத்து விதமான
பொருட்களும் தீயில் கருகி நாசமாயின. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு சுமார்
5 லட்ச ரூபாய்க்குமேல் இருக்கும் என கூறப்படுகிறது. தீக்கிரையான ஆய்வக
கட்டடத்தை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும்
அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தமிழகத்தில் இருந்தால் இரும்பு கரம் கொண்டு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். பிற மாநிலங்களைப் போன்று வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கட்டுப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என பொய்யான வீடியோவை வெளியிட்டவரை 48 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசு கைது செய்தது.
எனவே சட்டத்தின் ஆட்சியின்படி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரேனும்
முயற்சி செய்தால் அரசு அதனை அனுமதிக்காது. மணிப்பூரைப் போல அரசு வேடிக்கை
பார்த்து கொண்டிருக்காது என கூறினார். அப்போது நெல்லை மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் சின்னராசு, தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.
source https://news7tamil.live/tamil-nadu-will-not-have-fun-like-manipur-those-who-try-to-disrupt-law-and-order-will-be-punished-interview-with-the-speakers-father.html