credit ns7.tv
ஆவணப்பட இயக்குநர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வனத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினம் யானைகள்...யானைகளை மையப்படுத்தி பழமொழிகள் பல தமிழில் இருக்கிறது. யானை வருகிறது என்று கூறினாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரம்மிப்படைவர்.
அப்படி, பிரம்மிக்கவைக்கும் விலங்கான யானைகள் தற்போது, வாழ இடமின்றி ஊர்ப்பகுதிகளிலும், நகர்ப்பகுதிகளிலும் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், ஆவணப் பட இயக்குநர் ஜஸ்டின் சல்லீவன் ஒரு யானையை எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருவதுடன் உலகையே உலுக்கியுள்ளது.
அப்படி என்ன இருக்கிறது அந்த புகைப்படத்தில்?
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜஸ்டின் சல்லீவன், போட்ஸ்வானா பகுதிகளில் தனது ட்ரோன் கேமராவை வைத்து படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது கேமராவில் சிக்கிய புகைப்படம் தான் அந்த யானை புகைப்படம்.
தும்பிக்கை தனியாக, தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையிலும், முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையிலும் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைப்பது போல் இருக்கிறது அந்த புகைப்படம். யானையின் தந்தத்திற்காக அந்த பெரிய யானையை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டனர் அப்பகுதியில் உள்ள வேட்டையர்கள்.
ஜஸ்டின் சல்லீவன், அந்த புகைப்படத்திற்கு Disconnection என பெயரிட்டு வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது மிக உயரிய புகைப்பட போட்டியான Andrei Stenin International Press Photo Contest-க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Disconnection என்பது யானைக்கும் தும்பிக்கைக்குமான பிரிவு மட்டுமல்லாமல், வன விலங்குகளோடு மனிதர்களுக்குமான பிரிவையும் குறிக்கும் என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் ஜஸ்டின் சல்லீவன்.
தென் ஆப்ரிகாவின் போட்ஸ்வானா பகுதிகளில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்டையாடுதல் அதிகமாகிவிட்டது எனவும் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டு வரை அப்பகுதியில் கிடக்கும் இறந்த யானைகளின் எண்ணிக்கை 593% அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது, தென் ஆப்ரிக்காவின் சிம்பாவே, போட்ஸ்வானா, நமிபியா மற்றும் சாம்பியா போன்ற பகுதிகளில் அதிகமாவது குறிப்பிடத்தக்கது.