14 9 23
கேரளாவில் 4வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கள உண்மைகளை பார்க்கும் போது கேரள அரசு இன்னும் உரிய பாடங்களை கற்கவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.
கேரளாவில் 2018ல் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 2019ல் இரண்டாவது முறையாக எர்ணாகுளத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது 2 பேர் உயிரிழந்தனர்.
அப்போதே நிபுணர்கள், கேரளாவில் உள்ள பழம் திண்ணி வௌவால்கள் (Pteropus medius) மத்தியில் பாதிப்பு ஏற்படுத்தாமல், நிபா வைரஸ் பல்கி பெருகி வருவதால் திரும்ப நிபா வைரஸ் தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எச்சரித்தனர்.
பாதிப்பு எற்படும் போதெல்லாம் அதிக உயிரிழப்பை நிபா ஏற்படுத்துவதால், விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் (Zoonosis) நோய்கள் குறித்தான ஆய்வு தேவை என்பதை வலியுறுத்தினர். (2018ல் கேரள பாதிப்பு எங்கிருந்து எப்படி, எந்த சூழலில் ஏற்பட்டது என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது வெற்றி பெறவில்லை.)
கேரளாவில் பழம் திண்ணி வௌவால்கள் பல இடங்களில் இருந்தாலும், அவற்றில் நிபா வைரஸ் குடியிருந்தாலும், ஏன் கோழிக்கோடு பகுதியில் மட்டும் திரும்பத் திரும்ப நிபா வைரஸ் பாதிப்பு/உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்கான விடையை காண வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
பாதிப்பு முடிந்ததும் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.!
முதலில் பாதிப்பு அடைந்த நபரை (Index case) எப்படி வைரஸ் தொற்றி பாதிப்பை எற்படுத்தியது?
பழம் திண்ணி வௌவால்கள் தின்று மிச்சம் வைத்த பழத்தை மனிதர்கள் உண்டதால், வௌவால்களின் எச்சம் மனிதர்களை அடைந்தது எப்படி (தொடர்பு எப்படி ஏற்பட்டது)என்பது கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தியும் (Epidemiological studies) அது நடக்கவில்லை.
எந்த குறிப்பிட்ட சூழலில் வைரஸ் வெளியெற்றம் (Spillover) நடக்கிறது என்பதை தெளிவாக கண்டறிந்தால் மட்டுமே நோய் தடுப்பு முறைகளை திறம்பட செயல்படுத்த முடியும்.
குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பருவநிலையில் கேரளாவில் மக்கள் தொகை அடர்த்தி, அதிக மழையளவு, அங்குள்ள வனப்பகுதி போன்றவற்றுடன் வைரஸ் வெளியேற்றத்திற்கு தொடர்பு உள்ளதா? எனக் கண்டறிய வேண்டும் என நிபுணர்கள் ஆணித்தரமாக சொல்லியும் அது நடக்கவில்லை.
2018, 19 நிபா வைரஸ் பாதிப்பின் போது, வௌவால்களின் இனப்பெருக்க காலத்தில் (டிசம்பர்-மே) வைரஸ் பெருகி வெளியேறுகிறதோ என சந்தேகப்பட்ட நிலையில், 2021 மற்றும் தற்போது ஆகஸ்ட்-செப்டம்பரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அது உண்மை இல்லையோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
2023 ஜுலையில், இந்திய மருத்துவ ஆரிய்ச்சிக் கழகம் (ICMR) செய்த ஆய்வில், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் ஆபத்து மையங்களில் (Hot spot) இந்தியாவின் மலைப் பிரதேசங்கள்-கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.(வௌவால்களில் நிபா வைரஸ் பாதிப்பு 8 மாநிலங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.)
காடழிப்பின் காரணமாக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான தொடர்பு அதிகமாவது நிபா பரவ காரணமாக உள்ளதா? என்பது ஆராயப்பட வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடக்கும் காடழிப்பு சம்பவங்கள், காட்டில் வாழும் வௌவால்களின் வாழ்விட சூழலுக்கு எற்படுத்தும் பாதிப்பால் வௌவால்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வர நேர்வதால் நிபா பரவுகிறதா? என்பது ஆராயப்பட வேண்டும்.
2018ல் கேரளாவில் நிபா பரவலைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலும், பிற இடங்களிலும் Institute of Advanced Virology நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என இருந்தும், இன்னமும் அந்த பணி நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரவில்லை. குறிப்பாக நிபா வைரஸ் உள்ள 8 மாநிலங்களிலாவது அந்த நிறுவனம் விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மிகச் சிறந்த வைராலஜி துறை நிபுணருமான மருத்துவர் ஜேக்கப் ஜான் (கேரளாவைச் சேர்ந்தவர்; CMC வேலூர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் வைராலஜி துறைத் தலைவர்), கேரளாவில் AIIMS மருத்துவமனை தொடங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து, நோய்தடுப்புத் துறைக்கு எந்த வித முக்கியத்துவம் கொடுக்காததே தற்போதைய நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் முதல், இரண்டாம் நிபா வைரஸ் பாதிப்பை தற்போது உறுதிபடுத்த 12 நாட்கள் இடைவெளி இருந்தது, கேரள மருத்துவத்துறை செய்த பெரும் தவறு என்றும், நோய்தடுப்புத் துறைக்கு கேரள அரசு உரிய முக்கியத்துவம் கொடுக்காதாதே மிகப் பெரும் பிழை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிபா வைரஸைப் பொறுத்தவரை, அது உயிரி-போர்முறை (Bio-warfare) தந்திரமாக இருக்க முடியும் என்பது பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மருத்துவ இதழ்களில் வெளிவந்துள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பன்றிகளின் தொழுவத்தில் இவ்வைரஸ் பாதிப்பை கண்காணிப்பு இல்லாமல் இருந்தால், எளிதில் உருவாக்க முடியும். இதனால் பெரும்பாலும் மிகப்பெரும் உயிரிழப்பு பன்றிகள் மத்தியில் நிகழும்.
இந்த நிபா வைரஸ் பன்றிகளை பராமரிப்பவர்கள் மத்தியில் எளிதில் பரவி பின்னர் பிற மக்களுக்கும் எளிதில் பரவி பாதிப்பு/உயிரிழப்பு எற்படுத்துவதோடு, நாய்கள், பூனைகள், குதிரைகள் மத்தியிலும் நிபா வைரஸ் எளிதில் பரவ முடியும்.
மேற்சொல்லப்பட்ட அறிவியல் கருத்துகளை உள்வாங்காமல், தமிழக அரசும், கேரள எல்லையில் வெறும் கண்காணிப்பை மட்டும் (வண்டிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பது, காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் மட்டும் மேற்படி மூளைக்காய்ச்சல் அறிகுறி (Acute Encephalopathy Syndrome-AES)பற்றி ஆராய்வது) உரிய பலனைத் தருமா?எனும் கேள்வி உள்ளது.
அறிவியல் கருத்துகளின் படி தேவையான தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஏனெனில் நிபா பாதிப்பை தடுக்க மருந்துகளோ,தடுப்பூசியோ இல்லை. மேலும் மோனோகுளோனல் ஆண்டிபாடி மருந்து நிச்சயம் உதவும் என்று சொல்ல தெளிவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
அரசுகள் மேற்சொன்ன கருத்துகளை உள்வாங்கி செயல்பாடுகளில் உடனடியாக இறங்க முன்வருமா?
செய்தி: மருத்துவர் வீ.புகழேந்தி
source https://tamil.indianexpress.com/lifestyle/kerala-nipah-virus-symptoms-nipah-virus-in-kozhikode-1344789