புதன், 7 ஆகஸ்ட், 2024

உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழக அரசு சட்டம் இயற்றுமா? அ.தி.மு.க ஆதரிக்குமா? வி.சி.க எம்.பி கேள்வி

 Ravikumar

வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார், “பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா” என்றும்  “இதை அ.தி.மு.க ஆதரிக்குமா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

“பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து தமிழக அரசை வலியுறுதி வருகிறது. 

இந்நிலையில், வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார், “பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா” என்றும்  “இதை அ.தி.மு.க ஆதரிக்குமா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா?” என்று தலைப்பிட்டு பதிவிட்டிருப்பதாவது: 

“2011 சென்சஸ் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 

*அருந்ததியர் மக்கள் தொகை :  21,50,285

*தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தொகை :  24,65,096 

*பறையர்- ஆதிதிராவிடர் மக்கள் தொகை: 91,73,139. 

கிறித்தவர்களில் உள்ள பறையர் - ஆதிதிராவிடரை இத்துடன் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும். 

( இது 2011 சென்சஸ் அறிக்கையின் அடிப்படையில் திரு கிறித்துதாஸ் காந்தி IAS ( Retd) தயாரித்தது) 

சற்றேறக்குறைய பறையர் - ஆதிதிராவிடர் அளவு மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் பெற்றுள்ள இடத்தோடு ஒப்பிடும்போது பறையர்- ஆதிதிராவிடர் பெற்றுள்ள இடம் மிக மிகக்  குறைவு என்பதை எவரும் ஒப்புக்கொள்வார்கள். 

தமிழ்நாடு அரசு ஆர்.டி.ஐ விண்ணப்பம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலில் வேலை வாய்ப்பிலும், மருத்துவப் படிப்பிலும் வன்னியர் சமூகத்தினர் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் கேட்கும் 10.5% இட ஒதுக்கீட்டைவிடக் கூடுதலாக அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அவ்வாறிருந்தும் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு மறுக்கவில்லை.

வன்னியர் சமூகத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு கொடுத்ததற்குப் பிறகு வன்னியர்களைவிடப் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும், அரசியல் அதிகாரத்திலும் மிகவும் பின் தங்கியிருக்கிற பறையர் - ஆதிதிராவிடரும் ஏன் அதுபோல உள் ஒதுக்கீடு கேட்கக்கூடாது? என்ற கேள்வி பறையர் - ஆதிதிராவிடர் மக்கள் மனதில் எழுந்துள்ளது. 

தனிப்பட்ட உரையாடல்களில் அதை அவர்கள் வெளிப்படுத்தினாலும் தமிழ்நாடு அரசை நோக்கி அதை ஒரு கோரிக்கையாக இன்னும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் 

*வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக முதலில் சட்டம் இயற்றிய அ.தி.மு.க அதை ஆதரிக்குமா? 

* 10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக   அரசு அதுபோல பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?  

*தமிழ்நாடு அரசு அவ்வாறு சட்டம் இயற்றினால் இப்போது 10.5% சட்டத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் மற்ற அரசியல் கட்சிகளும் அதை ஆதரிப்பார்களா?” என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-mp-ravikumar-question-if-paraiyar-adi-dravidar-asks-internal-quota-will-tamil-nadu-govt-enact-law-will-admk-support-6803948