/indian-express-tamil/media/media_files/2026/05/31/cbse-re-evaluation-portal-hacked-2026-05-31-23-15-12.jpg)
மத்திய கல்வி வாரியத்தின் (CBSE) மறுமதிப்பீடு இணையதளம், திட்டமிட்ட சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதளத்தின் கட்டண நுழைவாயில் (Payment Gateway) குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், சுமார் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய பணிகளுக்காக சிபிஎஸ்இ இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருந்த எச்டிஎஃப்சி (HDFC) கட்டண நுழைவாயிலில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு மீறல் காரணமாக, கட்டண விவரங்களில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் வெறும் 1 ரூபாய் என்றும், வேறு சிலருக்கு அது மிக அதிகமாக 67,000 முதல் 68,000 ரூபாய் வரையிலும் மாறி மாறி காட்டியுள்ளது.
மறுமதிப்பீடு இணையதளம் பயன்பாட்டிற்கு வந்த உடனேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால், தொடக்க நிலையிலேயே அதன் கட்டணக் கட்டமைப்பில் இருந்த பலவீனங்களை இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "இணையதளத்தின் மீது அங்கீகரிக்கப்படாத சில தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எச்டிஎஃப்சி வங்கியின் கட்டண நுழைவாயில் பகுதியில் இந்த ஊடுருவல் நிகழ்ந்த சமயம், சுமார் 50 மாணவர்கள் உள்நுழைந்திருந்தனர். விளையாட்டுத் தனமாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இதனால் இணையதளம் சில காலம் செயல்படவில்லை, அந்த நேரத்தில் கணினிக்குள் ஊடுருவியவர்கள் இந்த முறைகேட்டைச் செய்துள்ளனர்" என்று தெரிவித்தன.
இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாகச் செயல்பட்டு ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) மற்றும் ஐஐடி கான்பூர் (IIT Kanpur) ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், டிஜிட்டல் இன்ஃப்ரஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Digital Infrastructure Corporation of India) குழுவினரையும் களமிறக்கியுள்ளது. இணையதளத்தின் கட்டமைப்பு மற்றும் கட்டண நுழைவாயில் இணைப்பை முழுமையாக தணிக்கை செய்து, அதனை வலுப்படுத்தும் பணிகளில் இந்த வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இணையதளத்தின் குறியீடுகளை (Codes) ஆராய்ந்து, கணினியை எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் இன்றி தடையின்றி இயக்குவதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய சிபிஎஸ்இ இணையதளப் பணிகளில் மாணவர்கள் எதிர்கொண்ட கட்டண மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த மே 24 அன்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஒரு தனியார் துறையை மட்டுமே சார்ந்திருக்காமல் கணினியின் பாதுகாப்பை உறுதி செய்ய, எஸ்பிஐ (SBI), கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய நான்கு பொதுத்துறை வங்கிகள் கூடுதல் கட்டண நுழைவாயில்களாக இணைக்கப்பட்டன. இந்த புதிய கட்டண நுழைவாயில்கள் சிபிஎஸ்இ இணையதளத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டமும் அண்மையில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
மறுபுறம், இணையதளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சிபிஎஸ்இ இணையதளம் தற்போது அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) கிளவுட் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தரவுகளைச் சேமிப்பதில் இடநெருக்கடி போன்ற சிக்கல்கள் இருந்ததாகவும், தற்போது அமேசான் வெப் சர்வீசஸ் தளத்திற்கு மாற்றப்பட்டதன் மூலம் இந்த தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் முழுமையாகக் களையப்பட்டு, இணையதளம் சீராக இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/cbse-revaluation-portal-hit-by-malicious-cyberattack-50-students-affected-11894168





