/indian-express-tamil/media/media_files/2026/06/07/iran-2026-06-07-16-36-35.jpg)
ஈரான் மீது பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக முஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார். அவரும் போரில் படுகாயமடைந்து சிகிசை பெற்று வருவதாக ஈரான் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், உயிரிழந்து 100 நாட்களை கடந்தும் இதுவரை அயதுல்லா அலி கமேனி உடலை ஈரான் அடக்கம் செய்யவில்லை.
இஸ்லாமியப் பாரம்பரியத்தின்படி, அடக்கம் மற்றும் இறுதிச்சடங்குகள் சில நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், ஈரானிய அதிகாரிகள் முன்னதாக இந்த நிகழ்வுகளை காலவரையின்றி ஒத்திவைத்திருந்தனர். இதையடுத்து, இந்த மாதம் இறுதிச் சடங்கு நடத்துவதற்கான திட்டங்களை ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் உள்ளிட்ட மூன்று நகரங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெறும் என தெஹ்ரான் துணை மேயர் முகமது அமின் தவாகோலி-சாதே இறுதிச்சடங்கின் ஏற்பாடுகள் குறித்து விவரித்து இருக்கிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மூன்று இடங்களிலும் பொது ஊர்வலங்கள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். இதுவரை அலி கமேனியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, புரட்சிகரப் பாதுகாப்புப் படைத் தளபதி காசெம் சுலைமானியின் இறுதி ஊர்வலம், கெர்மனில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, ஈராக் மற்றும் ஈரானில் உள்ள பல நகரங்கள் வழியாகப் பயணித்தது. அரசு ஊடகங்கள் இந்த நிகழ்வை தேசிய ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் அரசாங்கத்திற்கான ஆதரவாகவும் சித்தரித்தன.
கமேனியின் இறுதிச் சடங்கிலும் இதுபோன்ற பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு பெரிய மோதலுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது பல சவால்களை முன் வைக்கிறது. இதனால், இறுதி சடங்கும், அதிகாரமும் குழப்பத்திலேயே நீடிப்பதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/international/100-days-on-ali-khameni-remains-unburied-read-full-story-12011071





