புதன், 3 ஜூன், 2026

இந்தியாவுக்கு 12.5% புதிய கூடுதல் வரி; பாகிஸ்தான், கனடாவுக்கு 10%: அமெரிக்காவின் அறிவிப்பால் பரபரப்பு

 

அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகள் மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப், கூடுதலாக இறக்குமதி வரி விதித்தார். இந்த வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்கா உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், வசூலித்த வரி திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா கைவிட்டது. இந்நிலையில், கட்டாய உழைப்பு சட்டத்தை பின்பற்றுவதில் தோல்வியடைந்து விட்டது என்பதை காரணம் காட்டி இந்தியாவின் மீது 12.5% கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) புதன்கிழமை பரிந்துரைத்துள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான முறையான பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளன. தொடங்கிய மறுநாளே அமெரிக்கா இந்த அதிரடிப் பரிந்துரையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட 54 நாடுகளின் மீது இந்த 12.5% வரி விதிப்பைப் பரிந்துரைத்துள்ள அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, அதே நேரத்தில் பாகிஸ்தான், கனடா, ஈக்வடார், ஐரோப்பிய ஒன்றியம் , இந்தோனேசியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு 10% என்ற குறைந்த வரி விகிதத்தை பரிந்துரைத்துள்ளது. இந்நாடுகள் கொத்தடிமை உழைப்பு இறக்குமதியை தடுப்பதற்கான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவுடன் 'பரஸ்பர வர்த்தகத்திற்கான முறையான ஒப்பந்தத்தில்' (Agreement on Reciprocal Trade - ART) கையெழுத்திடச் சம்மதித்துள்ளதால் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொத்தடிமை உழைப்பு இறக்குமதித் தடையை விதிப்பதிலும், அதை திறம்பட அமல்படுத்துவதிலும் இந்தியா தவறிவிட்டது நியாயமற்றது என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தியாவின் தவறு அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு பாரமாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்துள்ளது. எனவே, இந்த விசாரணையின் முடிவுகள், இந்தியாவின் இத்தகைய கொள்கைகளும் நடைமுறைகளும் அமெரிக்க வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதல் வரிகள் 2026 ஜூலை 7-ம் தேதி முதலே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்களின் கருத்துகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கோரியுள்ளது. இதற்கான எழுத்துப்பூர்வக் கருத்துக்களை சமர்ப்பிக்க 2026 ஜூலை 6-ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த பொது விசாரணை ஜூலை 7 ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் (பின் இந்த வரிகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன). அந்த கடுமையான வரி விதிப்பால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறியதுடன், இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 12% சரிந்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும், மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified) அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்ததால், கடந்த பல மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான முறையான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாமல் தள்ளிப்போனது.

இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தியா-அமெரிக்கா கூட்டு அறிக்கையில், அமெரிக்காவின் அனைத்து தொழில் துறைப் பொருட்கள் மற்றும் உலர்த்தப்பட்ட தானியங்கள் (DDGs), கால்நடைத் தீவனத்திற்கான சிவப்பு சோளம், கொட்டைகள் (Tree nuts), புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை உணர்த்தும் விதமாக, அமெரிக்கா தனது தரவுப் பட்டியலை (Factsheet) மாற்றியமைத்தது. இந்தியாவின் டிஜிட்டல் சேவை வரிகள் (Digital Services Taxes) குறித்த பகுதியை அது முற்றிலும் நீக்கியது. முந்தைய பதிப்பில், அமெரிக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது (Committed) என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய பதிப்பில் அந்த வார்த்தை திட்டமிட்டுள்ளது (Intends) என மென்மையாக மாற்றப்பட்டது.

ஓமனுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்ததை அறிவிப்பதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளன. இரு நாடுகளும் முதற்கட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பரந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று கூறினார். மேலும் இந்த மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரை (Jamieson Greer) சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது நட்பு நாடுகளைத் தங்களுக்கு சாதகமாகப் பணிய வைக்க டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்திய 'IEEPA' வரிகளை விட, தற்போது முன்மொழியப்பட்டுள்ள Section 301 வரிகள் மிகவும் மோசமானவை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்தபோது, அமெரிக்காவின் கடுமையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்ததால், இந்தியாவின் மீது அதிகபட்சமாக 50% வரை அமெரிக்கா வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/international/us-proposes-fresh-125-tariffs-on-india-amid-trade-talks-10-on-pak-canada-eu-11902622