வெள்ளி, 19 ஜூன், 2026

எழுதிக் கொடுத்ததா என தெளிவு படுத்துங்க

 19 6 2026 

’பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை பா.ஜ.க எழுதி கொடுத்ததா?’ என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான உதயநிதி ஸ்டாலினின் விமர்சன

நேற்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. சட்டமன்ற குழுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்;

”கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை. ஆனால், இந்த முறை அரசு என்ன தயாரித்துக் கொடுத்ததோ, அதை ஒரு வரி, ஒரு எழுத்து மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். இதிலிருந்தே தற்போதைய ஆளுங்கட்சிக்கும் (தவெக) பாஜகவிற்கும் இடையே ஒரு இணக்கமான உறவு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.பா.ஜ.க எழுதிக் கொடுத்ததைத்தான் ஆளுநர் வாசித்துள்ளா

சட்டமன்ற மரபுகளின்படி கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநர் உரை முடிந்த பிறகு தேசிய கீதமும் இசைக்கப்படும். ஆனால், இந்த முறை இரண்டு முறை தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாஜாகவின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் அண்டர்ஸ்டாண்டிங்கில் நடக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள இருமொழிக் கொள்கை, 69% இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, கீழடி அகழாய்வு, ஒலிம்பிக் மையங்கள் மற்றும் 'வறுமையில்லா தமிழ்நாடு' போன்ற அனைத்துமே கடந்த திமுக (திராவிட மாடல்) அரசின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகும்.

கடந்த தி.மு.க. அரசின் திட்டங்கள் மீது தங்களின் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு, கடந்த கால நிர்வாகம் சரியில்லை என்று ஆளுநர் உரையில் பழிபோடுவதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.

முதலமைச்சர் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்று, தமிழ்நாடு பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று பெருமை பேசியது கடந்த திமுக அரசின் சாதனையே தவிர, இவர்களின் 38 நாள் சாதனை அல்ல” என்று கடுமையாக சாடினார். 

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, வி.சி.க-வின் முக்கிய முகமும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு ஊடகங்கள் வாயிலாக மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளரிடம் அவர் கூறுகையில்;

"பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளின்படிதான் இந்த அரசு செயல்படும் என்று ஆளுநர் உரையின் தொடக்கத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை எழுதிக் கொடுத்தது பா.ஜ.க-வா என்பதை உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆன்மாவான இருமொழிக் கொள்கையே இந்த அரசின் கொள்கை என ஆளுநர் உரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொழிக் கொள்கையையும் பா.ஜ.க-வா எழுதிக் கொடுத்தது?

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.3,348 கோடி கல்வி நிதியைத் தருவோம என்ற மத்திய பா.ஜ.க அரசின் நிபந்தனைக்கு இந்த ஆளுநர் உரையில் மிகக் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அழுத்தத்திற்குப் பணிய மாட்டோம் என ஆளுநர் உரையில் கூறியிருப்பதும் பா.ஜ.க-வின் அறிக்கைதானா?

தமிழ்நாட்டின் தேசிய இன அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், சட்டப்பேரவை விதி 176-ன் படி முறையாகப் பின்பற்றப்படுகிறது. இதையும் பா.ஜ.க-தான் எழுதிக் கொடுத்ததா.?

கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் குரலாகவும் களமாடிய இயக்கம் விசிக. 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்களின் கொள்கை முழக்கம் இன்று சாத்தியமாகியுள்ளது.

தலைமைச் செயலகத்தின் கதவுகள் நரிக்குறவர் சமூகம் உள்ளிட்ட அனைத்து எளிய மக்களுக்காகவும் நள்ளிரவு வரை திறந்தே இருக்கும். ஓட்டு அரசியல் அல்லது சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மக்களின் மனுக்கள் மீதும் இந்த சமூக நீதித்துறை அடுத்த 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

எதிர்க்கட்சிகள் தங்களின் ஜனநாயகக் கடமையாக விமர்சனங்களை முன்வைக்கலாம், ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது” என உதயநிதி ஸ்டாலினின் தவெக-பாஜக கூட்டணி விமர்சனத்தை அமைச்சர் வன்னி அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-vanni-arasu-tvk-bjp-alliance-12052741