திங்கள், 8 ஜூன், 2026

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்; ஈரானை துவம்சம் செய்துவிடுவேன்... டிரம்ப் எச்சரிக்கை

 

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்; ஈரானை துவம்சம் செய்துவிடுவேன்... டிரம்ப் எச்சரிக்கை 08 06 2026

ஈரான் மீதான தாக்குதலை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் ஈரானும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். என்.பி.சி நியூஸ் ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "ஈரானுடனான மோதல் முடிவற்ற போர் அல்ல. கடந்த மூன்று மாதங்களாக நாம் இதைச் செய்து வருகிறோம். இதில் பெரும்பகுதி ஒரு நல்ல போர்நிறுத்த உடன்பாட்டின் கீழ் தான் நடந்துள்ளது.
தற்போது ஒப்பந்தம் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை என்றால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன். உண்மையில் அதுதான் எனக்கு மிகவும் எளிதான வழி" என்று தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் உள்ள 400 கிலோவிற்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றி அழிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதற்கு ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும், அந்த இடத்திலேயே அல்லது வேறு இடத்திற்கு மாற்றியோ அது அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி முந்தைய தலைவர்களை விட மிகவும் புத்திசாலி மற்றும்  பகுத்தறிவு உள்ளவர் என டிரம்ப் பாராட்டியுள்ளார்.

நேரடிப் போருக்குத் தயார் - ஈரான் பதிலடி

டிரம்பின் இந்த மிரட்டல்களுக்கு மத்தியில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், நேரடி மோதலுக்குத் தயார் என்று ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையை நிறுத்துவது மட்டுமல்லாமல், எதிரியுடன் நேரடியாக மோதவும் தயங்காது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படுவதும் இல்லை, பேச்சுவார்த்தையை நம்புவதும் இல்லை. லெபனான் மீதான கடல் வழி முற்றுகை மற்றும் ஒப்பந்த மீறல்கள் மூலம், அவர்களுக்கு அதிகாரத்தின் மொழி மட்டுமே புரியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா அல்லது போர் தீவிரமடையுமா என்ற பதற்றம் தற்போது சர்வதேச அரங்கில் அதிகரித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/international/i-will-blow-the-hell-out-of-them-trump-threatens-iran-if-negotiations-fail-read-full-story-12012419