பல தசாப்தங்களுக்கு பிறகு திறக்கும் கதவுகள்... நஷ்டஈடு கேட்ட ஈரானுக்கு முதலீட்டை மாற்றிய அமெரிக்கா
/indian-express-tamil/media/media_files/2026/06/17/trump-2026-06-17-08-38-05.jpg)
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் பிப்ரவரி 28-ஆம் தேதி கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஏப்ரல் மாதம் இந்த மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் ஜூன் 19-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
இதில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை நிறுத்தவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானின் 300 பில்லியன் டாலர் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில் பாதிக்கும் மேல் உள்ள தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
300 பில்லியன் தனியார் நிதி
இது முழுக்க முழுக்க ஒரு தனியார் முதலீட்டுத் திட்டமாகும். இதில் எந்தவொரு அரசாங்கத்தின் நிதியோ அல்லது மானியங்களோ சேர்க்கப்படாது. அமெரிக்கா, வளைகுடா அரபு நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே பாதிக்கும் மேலான நிதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆற்றல், தளவாடங்கள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.
ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக அமெரிக்காவிடமிருந்து 400 பில்லியனை ஈரான் முதலில் கோரியது. ஆனால், அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அதற்கு மாறாக இந்த ”மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி" யோசனை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் பொருளாதாரப் பலம் மற்றும் தேவை
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் தொடர் பொருளாதாரத் தடைகள் காரணமாக, கடந்த 40 ஆண்டுகளாக ஈரானுக்குள் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. ஆனால், ஈரானிடம் உள்ள மிகப்பெரிய பலமே அங்குள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பு மற்றும் உலகின் நான்காவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு தான். இந்த புதிய நிதியின் மூலம், போரில் சேதமடைந்த ஈரானின் முபாரகே எஃகு ஆலை (Mobarakeh Steel complex), சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்படும்.
அடுத்த 60 நாட்கள் மிக முக்கியம்
இந்த முதலீட்டு நிதியானது, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிப்பது போன்ற பேச்சுவார்த்தைகளில் இருந்து முற்றிலும் தனித்து இயங்கும் ஒரு அமைப்பாகும். ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து அடுத்த 60 நாட்களுக்குள் திட்டங்கள் வகுக்கப்படும். இறுதி ஒப்பந்தம் முழுமையாகக் கையெழுத்தான பிறகே இந்த நிதி அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வரும்.





