ஞாயிறு, 21 ஜூன், 2026

அமெரிக்கா செஞ்ச நம்பிக்கை துரோகம்... ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்; கதிகலங்கிய உலக நாடுகள்

 

அமெரிக்கா செஞ்ச நம்பிக்கை துரோகம்... ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்; கதிகலங்கிய உலக நாடுகள்

10 6 2026 
hor

அமெரிக்கா - ஈரான் இடையே சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. ஈரானின் உயர்மட்ட கூட்டுப் படைத்தளபதி தலைமையகமான கதம் அல் அன்பியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது தங்களது பதிலடியின் முதல் கட்டம் என்றும் தாக்குதல் தொடர்ந்தால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் விதிமுறையே மீறப்பட்டுள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. 

லெபனானில் கொடூரம்

போர்நிறுத்தம் பற்றிய தகவல்கள் வெளியான போதிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்த அதே நாளில் தான் ஈரானிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. சனிக்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மறுபுறம், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒரே இரவில் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை தற்போது 4,000-ஐ கடந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்

ஈரானின் இந்த அதிரடி முடிவால், இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில்  ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், "ஈரான் எல்லையை மூடுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறிய சில மணி நேரங்களிலேயே ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. லெபனானில் சண்டை முழுமையாக நிறுத்தப்பட்டால் மட்டுமே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்ட 60 நாட்கள் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடரும் என ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இதனிடையே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இடைக்கால ஒப்பந்தம் குறித்த தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தர்களின் பங்கேற்புடன் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று முக்கிய மத்தியஸ்தரான பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/international/iran-closes-strait-of-hormuz-again-as-16-killed-in-israeli-strikes-in-lebanon-12057951