தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் நீடித்து வந்த வெயிலின் தாக்கம் தணிந்து, நேற்று இரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூரைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவினாலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை நீடிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை:
சென்னையில் வடபழனி, அசோக் நகர், கிண்டி, பட்டினப்பாக்கம், போரூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.
மதுரவாயில் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் பலத்த சூரைக்காற்றால் சரிந்து விழுந்து, அங்கிருந்த தேநீர் கடை சேதமடைந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர். இதேபோல் சாலிகிராமம் மற்றும் மதுரவாயில் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் மற்றும் பிரதான சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான சாலையும் முற்றிலும் மழைநீரில் மூழ்கியது.
ஆவடி கன்னிகாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மந்தமான வடிகால் பணி காரணமாக, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுமார் இரண்டு அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் பள்ளி முடிந்து திரும்பிய குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டடன. சேலம், கோவை, கொல்கத்தா, டாக்கா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
இதர மாவட்டங்களில் பரவலான மழை
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நத்தப்பேட்டை, களக்காட்டூர், தாமல் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. நீலகிரி மாவட்டம் உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் ரயில்வே பாலத்தின் கீழ் குளம் போல் தண்ணீர் தேங்கியது; குன்னூரிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. விருதுநகரில் அரசு மருத்துவமனை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவகங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் திருவண்ணாமலை, மதுரை, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.





