புதன், 3 ஜூன், 2026

இந்தியா கூட்டணியில் தான் தி.மு.க நீடிக்கிறது: காங்கிரஸ் அடித்த ட்விஸ்ட்; தமிழக அரசியலில் பரபரப்பு

 

dmk cong krish

இந்தியா கூட்டணியில் தான் தி.மு.க நீடிக்கிறது: காங்கிரஸ் அடித்த ட்விஸ்ட்; தமிழக அரசியலில் பரபரப்பு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, மற்றும் ஐ.யு.எம்.எல் (IUML) ஆகிய கட்சிகள் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்தன.

இதில், தி.மு.க கூட்டணியில் இருந்து முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் கூட்டணியும் அமைத்துக்கொண்டது. இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன. காங்கிரசின் இந்த அதிரடி நடவடிக்கை தி.மு.க ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை கண்டித்து தி.மு.க கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.விற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வாங்குவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் ராஜ்யசபா சீட் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகக் கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்தார். காங்கிரஸ் மேலிடம் எனக்கு கோவா மாநிலத் தலைவர் பொறுப்பை கூடுதலாக வழங்கியுள்ளது. இதை ஒரு பரிசாக பார்ப்பதை விட, எனக்கு அளிக்கப்பட்ட கூடுதல் பொறுப்பாகவே கருதி சிறப்பாகப் பணியாற்றுவேன். பா.ஜ.க என்ன செய்கிறது, அவர்களின் சிந்தனை என்ன என்பது சில நேரங்களில் யாருக்கும் புரிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளும் எண்ணங்களும் முற்றிலும் வெவ்வேறான கோணங்களில் உள்ளன. மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு கட்சிக்கும், தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சிக்கும் மிக முக்கியப் பங்களிப்பாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்வது குறித்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யுடன் நாங்கள் கலந்து ஆலோசித்து விரைவில் இறுதி முடிவு எடுப்போம். தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே தமிழ்நாட்டில் மோதல் நிலவினாலும், 'இந்தியா கூட்டணி' என்பது டெல்லியில் உள்ள மேலிடத் தலைவர்களால் கையாளப்படும் விவகாரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, திமுக இன்னும் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது. அதில் தற்போதைக்கு வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில், காங்கிரஸிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சர் விஜய்யுடனான அடுத்தகட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-continues-to-be-in-india-alliance-congress-leader-girish-chodankar-amid-local-rift-with-dmk-11902456