ஞாயிறு, 14 ஜூன், 2026

சென்னையில் இறங்கும் ‘தூசி ஒழிப்பு’ பீரங்கிகள் : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ரூ.3 கோடியில் இயந்திரம்

 chen

சென்னையில் உள்ள தொழில்பேட்டைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் காற்றில் பரவும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சி.என்.ஜி மூலம் இயங்கும் 8  'கேனான் மிஸ்ட் ப்ளோவர்' (பீரங்கி போன்ற பனிமூட்ட நீர் தெளிப்பான்) இயந்திரங்களை ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்குப் பெருநகர சென்னை மாநகராட்சி  திட்டமிட்டுள்ளது.

சென்னையின் 3 மண்டலங்களில் அதிரடிப் படை

சென்னையின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் பயன்படுத்துவதற்காக, பெரிய வாகனங்களில் பொருத்தக்கூடிய 2 இயந்திரங்களும், சிறிய வாகனங்களில்  பொருத்தக்கூடிய 6 இயந்திரங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எளிதாக எங்கும் கொண்டு செல்லக்கூடிய இந்த இயந்திரங்கள், காற்றில் மிக நுண்ணிய நீர்த்துளிகளைப் பனிமூட்டம் போலத் தெளித்து, தூசித் துகள்களைக் கீழே படியச் செய்து காற்றின் தரத்தை உயர்த்தும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் கூறியதாவது, "சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  மற்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்காக இந்த 'மிஸ்ட் ப்ளோவர்கள்' அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை தண்ணீரைப் பனிமூட்டம் போலத் தெளித்து தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்தும். இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பிறகே, இவற்றை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இயந்திரங்களின் அசாத்தியத் திறன்

சிறிய வாகனத்தில் பொருத்தப்படும் இயந்திரங்கள் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியையும், மாற்றி அமைக்கும் வசதி கொண்ட 23 முனைகளையும் கொண்டிருக்கும். 5 குதிரைத்திறன் கொண்ட இந்த அமைப்பு மூலம், நிமிடத்திற்கு 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி 30 மீட்டர் தூரம் வரை தண்ணீரை பீச்சி அடிக்க முடியும்.

பெரிய வாகனத்தில் பொருத்தப்படும்  21 குதிரைத்திறன் மெக்கானிசம் கொண்ட இந்த பெரிய இயந்திரங்கள் மூலம், நிமிடத்திற்கு 20 லிட்டருக்கும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி 70 மீட்டர் தூரம் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியும். இந்தத் தெளிப்பு நடவடிக்கைகளால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க முறையான வடிகால் வசதிகளும் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/8-cng-mist-blowers-to-be-procured-for-over-rs-3-cr-to-curb-dust-pollution-12036059