திங்கள், 8 ஜூன், 2026

இந்தியா கூட்டணி கூட்டம்: தி.மு.க புறக்கணிப்பு, அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்; கடும் விவாதங்களுக்கு வாய்ப்பு

 INDIA bloc meeting

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாகத் தங்களது நாடாளுமன்ற உத்தியை வகுப்பதற்காக, இந்தியா கூட்டணித் தலைவர்கள் கடைசியாக நாடாளுமன்றத்தில் சந்தித்திருந்தனர்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் நாடாளுமன்றக் கூட்டு உத்தியை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த ஏப்ரல் 15 அன்று சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை டெல்லியில் இந்த கூட்டணி கூடும்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன, மேலும் கூட்டணிக்குள்ளான சமன்பாடுகளும் மாறியுள்ளன. இந்த முறை கூட்டத்தில் திமுக பங்கேற்காது. தமிழ்நாடு தேர்தலுக்குப் பிறகு உறவை முறித்துக் கொள்ளும் காங்கிரஸின் முடிவால் தி.மு.க கோபத்தில் உள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்து, கட்சி உடைந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டு, ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்து தள்ளியிருந்த திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) இப்போது இன்னும் தீவிரமான பங்கை ஆற்ற விரும்புகிறது.

கூட்டணிக் கட்சிகளில் சிலரிடையே அதிருப்தி புகைந்து வருவதால், திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூட்டணித் தலைவர்கள் தெரிவித்தனர். சி.பி.ஐ(எம்) மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) ஆகிய கட்சிகள், காங்கிரஸின் செயல்பாட்டு முறை குறித்து அதன் தலைமைக்குத் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. இந்த மாதம் ஜார்கண்டில் இருந்து தேர்தல் நடக்கவிருக்கும் இரண்டு ராஜ்யசபா இடங்களில் ஒன்றிற்கு, காங்கிரஸ் "தன்னிச்சையாக" வேட்பாளரை அறிவித்ததால் ஜே.எம்.எம் அதிருப்தியில் உள்ளது. அதே நேரத்தில், சமீபத்திய கேரள சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாகத் தாக்கிப் பேசியதற்கு சி.பி.ஐ(எம்) தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

"மக்களரிடையே இந்த அரசுக்கு எதிராகத் தெளிவான கோபம் உள்ளது, ஆனால் எதிர்க்கட்சிகளால் அதைத் தேர்தலாக மாற்ற முடியவில்லை. அதுகுறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒரு வரைபடம் உருவாக்கப்பட வேண்டும். காங்கிரஸ் இந்த கூட்டணியை வழிநடத்த விரும்பினால், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். காங்கிரஸால் மட்டும்தான் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும் என்று அதன் தலைவர்கள் ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அப்படியென்றால், இந்த கூட்டணி எதற்கு? உபி, பீகார், தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது? சில அமைச்சர் பதவிகளுக்காக தி.மு.க-வை ஓரங்கட்டியது கூட்டணிக்கு தவறான நடவடிக்கை. இதனால் மற்ற கட்சிகள் இயல்பாகவே காங்கிரஸை எச்சரிக்கையுடன் அணுகும்," என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் முன் பல பிரச்சினைகள் உள்ளதால், எதிர்க்கட்சிகள் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று இடதுசாரித் தலைவர் ஒருவர் கூறினார். "ஒருங்கிணைப்பிற்கு யார் பொறுப்பு? காங்கிரஸ் கூட்டணிக்குத் தலைமை தாங்கினால், அது கூட்டணியின் தலைவராகச் செயல்பட வேண்டுமே தவிர, சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்யக் கூடாது," என்று அந்தத் தலைவர் கூறினார்.

திங்கட்கிழமை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்), எல்லை மறுநிர்ணயம் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, மற்றும் தேர்வுத் தாள் கசிவு மற்றும் கல்வி முறை சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் எல்லை மறுநிர்ணயம் மசோதாவை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனதைத் தொடர்ந்து, அதை மீண்டும் கொண்டு வரவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வரைவுச் சட்டத்தைக் கொண்டு வரவும் அரசு முயற்சிக்கலாம்.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு, திமுகவின் வரவு இல்லாதது ஒரு பெரிய இழப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுடன் காங்கிரஸ் இணைந்துள்ளதால், தனது முன்னாள் கூட்டாளியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள திமுக விரும்பவில்லை. இது கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் எதிர்காலப் பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில காங்கிரஸ் அல்லாத இண்டியா கூட்டணித் தலைவர்கள் திமுக தலைவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே இக்கூட்டம் என்பதால் தவெக இக்கூட்டத்தில் பங்கேற்காது என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மதியம் 12 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இக்கூட்டத்தில், மம்தா பானர்ஜியும் அவரது இரண்டாம் கட்டத் தலைவரான அபிஷேக் பானர்ஜியும் சமரசம் செய்பவர்களாகச் செயல்பட வாய்ப்புள்ளது. பானர்ஜிகளே தங்களுக்குள் பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்தாலும், திரிணாமுல் நாடாளுமன்றக் கட்சியை உடைக்கும் முயற்சிகளைத் தடுக்கவே முயன்று வருவதாகத் தெரிகிறது. வங்காளத்தில் அடைந்த தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணி விஷயத்தில் சற்று இணக்கமாக நடந்து கொள்கிறது, மேலும் பா.ஜ.க-வை எதிர்க்க அதற்கு இண்டியா கூட்டணியின் ஆதரவு தேவைப்படுகிறது.

"பொதுவான நோக்கத்துடனும் தெளிவான எண்ணத்துடனும் சந்திக்கிறோம். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. பல கட்சிகள் தோழமையுடன் சந்திக்க ஆவலுடன் உள்ளன," என்று 23 கட்சிகள் பங்கேற்கும் என்று அறிவித்த காங்கிரஸின் ஊடகத் தலைவர் ஜெய்ராம் ரமேஷின் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ பிரையன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சில கட்சிகள் தங்களது சொந்தக் காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்க இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன - கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும், அரசியலமைப்பைத் தினமும் தாக்கும், விசாரணை முகமைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்கும், விலைவாசி உயர்வு மூலம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும், இளைஞர்களின் நம்பிக்கையைத் துரோகம் செய்யும் மோடி அரசின் கொள்கைகளுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் அவர்கள் வரவில்லை," என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பானர்ஜிகளைத் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்.ஜே.டி-யில் இருந்து தேஜஸ்வி யாதவ் அல்லது மனோஜ் ஜா, சி.பி.ஐ(எம்) ராஜ்யசபா எம்.பி ஜான் பிரிட்டாஸ், சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, சி.பி.ஐ-எம்.எல் (விடுதலை) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பி.டி.பி தலைவர் மெகபூபா முஃப்தி, ஐ.யு.எம்.எல் கட்சியின் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே. மணி, ஆர்.எஸ்.பி தலைவர் என்.கே. பிரேமச்சந்திரன், என்சிபி எம்பி சுப்ரியா சுலே, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் ம.தி.மு.க தலைவர் வைகோ ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் மற்றும் நேஷனல் கான்ஃபரன்ஸ் தலைவர் உமர் அப்துல்லாவும் பங்கேற்க வாய்ப்புள்ள நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாகப் பங்கேற்பார்.



source https://tamil.indianexpress.com/india/india-bloc-meeting-delhi-dmk-absent-congress-allies-discontent-tmc-role-12012265