புதன், 10 ஜூன், 2026

ஈரான் மீது பொழிந்த குண்டு மழை 10 06 2026

 

ஈரான் மீது பொழிந்த குண்டு மழை 10 06 2026

iran

ஈரான் - அமெரிக்கா இடையே சமீபகாலமாக மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்காப்புக்கான தாக்குதல் என கூறி அமெரிக்கா, ஈரான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், 
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

பண்டார் அப்பாஸ், கெஷ்ம், சிரிக் உள்ளிட்ட பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளிலும், ஹார்முஸ் ஜலசந்தியிலும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்காவின் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடுக்கப்பட்ட இந்த புதிய தாக்குதல்  ஈரானின் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில்  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், இதற்கு பழிக்கு பழி வாங்கப்படும் என்று ஈரானை டிரம்ப் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹார்முஸ் ஜலசந்தியின் மேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் எனக்குத் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

அதில் இரண்டு விமானிகள் இருந்தனர். அவர்கள் இருவரும் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டிப்பாகப் பதிலடி கொடுத்தே தீரும் " என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கிய நிலையில் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் முதல்முறையாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுப்போம் - ஈரான்

அப்பாச்சி ஹெலிகாப்டர் ஈரான் படைகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் பொறுப்பல்ல என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது நிலவும் சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடும். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

source https://tamil.indianexpress.com/international/us-launches-proportional-strikes-on-iran-over-downed-helicopter-read-full-story-12020331