ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: புழல் சிறையில் 'இ-பிரிசன்ஸ்' மென்பொருள் சோதனை முயற்சி- ஐகோர்ட் உத்தரவு 4 6 2026
/indian-express-tamil/media/media_files/2026/05/29/chennai-high-court-3-2026-05-29-05-43-57.jpg)
ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: புழல் சிறையில் 'இ-பிரிசன்ஸ்' மென்பொருள் சோதனை முயற்சி- ஐகோர்ட் உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான நடைமுறைகளை எளிதாக்கும் ‘இ-பிரிசன்ஸ் முன்கூட்டிய விடுதலை செயலாக்க மென்பொருள்’ (E-Prisons Early Release Processing Module) திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த மென்பொருள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்டமாக, சென்னை புழல் மத்திய சிறைச்சாலை முன்னோடித் திட்டமாக (Pilot Project) எடுத்துக் கொள்ளப்படும். மேலும், இந்த சாப்ட்வேர் சரியான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான பங்குதாரர்களின் (Stakeholders) கூட்டத்தை 2 வாரங்களுக்குள் கூட்டுமாறு உயர் நீதிமன்ற தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT) பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கூட்டம் நடந்த பிறகு, புழல் சிறையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த நிலை குறித்த அறிக்கையை (Status Report), அடுத்த ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை முயற்சி வழக்கு மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 21 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நாஞ்சில் முகிலன் என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணையின்போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விசாரணையின் போது, சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை கோரி சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை எவ்வித சிரமமும் இன்றி மின்னணு முறையில் பரிசீலனை செய்வதற்காக, கடந்த ஏப்.13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி, இந்த மென்பொருள் Module-ஐ தமிழகச் சிறைகளிலும் செயல்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக இந்த நீதிமன்றம் இதனை எடுத்துக் கொள்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.





