சனி, 20 ஜூன், 2026

சட்டமன்றத்தில் வெடித்த 'சினிமா VS அரசியல்' விவாதம்

 

TN Assembly CM VIjay

"தமிழ் எங்கள் மூச்சு... டைரக்டர் அட்லி எதுக்கு?" – சட்டமன்றத்தில் வெடித்த 'சினிமா VS அரசியல்' விவாதம்!

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே  வெள்ளிக் கிழமை (ஜூன் 19) சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது பேசிய தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளை இயக்குனர் அட்லியின் திரைப்பட உருவாக்கத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில்:

"இயக்குனர் அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை ஆங்காங்கே எடுத்து, அதனை வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார். அதேபோலத்தான் முந்தைய எங்கள் ஆட்சியின் சாதனைகளை வைத்துக்கொண்டு தற்போது இந்த ஆட்சி நடத்தப்படுகிறது.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு ட்ரெய்லர் ஹிட் அடிக்க வேண்டும் என்றால், அதில் காட்சிகள் மிகவும் சுருக்கமாகவும் சுறுசுறுப்பாகவும் (Crisp) இருக்க வேண்டும். அதேபோல, காலங்களும் மாறும், காட்சிகளும் விரைவில் மாறும்" என்று விமர்சித்தார்.

தி.மு.க. உறுப்பினரின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாக பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்:

"தமிழ் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராகியுள்ளார். ஆனால், ஒரு முழுநேர அரசியல்வாதியான சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் சட்டசபையில் இயக்குனர் அட்லீ குறித்தும், எடிட்டிங் குறித்தும் பேசுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. அட்லிக்கும் இந்த சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்?

காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது என்பதை இந்த சட்டமன்றத்தைப் பார்த்தாலே தெரியும். மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை நாங்கள் என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, மேகதாது உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சனைகளை விவாதித்து, இந்தச் சபையை ஆக்கப்பூர்வமான அரசியல் பாதையை நோக்கி நாம் கொண்டு செல்ல வேண்டும். அதை விடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Credit: PT Tv

அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், 

"உங்களையும் நான் ‘எக்ஸ்’ தளத்தில் பின்தொடர்கிறேன், இயக்குனர் அட்லீயையும் பின்தொடர்கிறேன். அதனால், சட்டசபையில் நான் அட்லீ குறித்தும் பேசுவேன், தேவைப்பட்டால் சட்னி குறித்தும் பேசுவேன்" என்று நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் பதிலளித்தார்.

திரைப்பட இயக்குனர் அட்லி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை மையப்படுத்தி, சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நடந்த இந்த விவாதம் அவையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-debate-mla-sivashankar-minister-rajmohan-director-atlee-12055741