திங்கள், 1 ஜூன், 2026

2029-க்குள் தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்:

 delimitation Bill

2029-க்குள் தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்: மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க தீவிரம்

தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போன போதிலும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த சட்டத்தையும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவையும் மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அறிந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ.க, நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் மறுசீரமைப்பைக் கொண்டு வரும் நோக்கில், பிராந்தியக் கட்சிகளை அணுகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், எந்தவொரு படியையும் எடுப்பதற்கு முன், மத்திய அரசு முறையான நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று முதன்மை எதிர்க் கட்சியான காங்கிரஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் கொண்டுவரப்பட்ட 'அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026' மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவைத் தயாரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த ஏப்ரல்-மே சட்டமன்றத் தேர்தல்களில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் முறையே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் சந்தித்த கடுமையான தேர்தல் சரிவுகள், எதிர்க்கட்சிகளின் பலத்தைக் குறைத்துள்ளன. இதுவே பா.ஜ.க.வின் இந்த புதிய முயற்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் தோல்வி மற்றும் தமிழகத்தில் உருவான புதிய அரசியல் சூழலில் (த.வெ.க அரசில் காங்கிரஸ் இணைந்தது போன்ற மாற்றங்கள்), குறிப்பிட்ட சில விவகாரங்களில் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள உள்விவகார முரண்பாடுகளையும் பா.ஜ.க உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

'ஒரே நாடு ஒரேதேர்தல்' மசோதாவை தயாரிக்கும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது இந்த மசோதா 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சௌத்ரி பேசுகையில், சட்டம் விரைவில் திருத்தப்படும். அறிக்கை தயாரிக்கும் பணி நல்ல முன்னேற்றமடைந்துள்ளது, உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பதவிக்காலம் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் வெவ்வேறு காலகட்டங்களில் முடிவடைவதால், இந்தச் சட்டம் ஒரேடியாக அல்லாமல் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மற்றொரு பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா தொடர்பாக பா.ஜ.க ஏற்கனவே திமுகவைத் தொடர்பு கொண்டு, அக்கட்சியின் கவலைகளைப் போக்கும் வகையில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த தி.மு.க தலைவர் ஒருவர் கூறுகையில், தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற விவகாரங்களில், கட்சியின் நிலைப்பாடு எப்போதும் வெறும் கொள்கையை மட்டும் சார்ந்திருக்காமல், தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டது. மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் தண்டிக்கப்பட மாட்டாது என்ற நம்பகமான உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கி, தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தைப் பாதுகாக்கும் பரஸ்பர சூத்திரத்தை உருவாக்கினால், இந்த முன்மொழிவை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் முக்கியக் கவலை.

இருப்பினும், பா.ஜ.க.வுடனான அரசியல் உடன்பாடு குறித்த பேச்சுகள் இப்போதைக்கு முன்கூட்டியவை என்று தி.மு.க தலைவர்கள் மறுத்து உள்ளனர். வாஜ்பாய் காலத்தில் நடந்ததுபோல, அசாதாரண சூழ்நிலைகளில் குறிப்பிட்ட விவகாரங்களுக்கு மட்டும் கட்சிகள் ஆதரவளிப்பது நாடாளுமன்ற வரலாற்றில் இயல்பானதுதான் என்றும், எதிர்கால முடிவுகள் தமிழ்நாட்டின் கூட்டாட்சி உரிமைகள் பாதுகாக்கப்படுவதைப் பொறுத்தே அமையும் என்றும் முன்னாள் தி.மு.க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, காங்கிரஸ், திமுக (22 எம்பிக்கள்), டிஎம்சி (28 எம்பிக்கள்) உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி 230 எம்பிக்களுடன் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வாக்களித்தது. மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதோடு இந்த தொகுதி மறுவரையறையை இணைப்பதற்கும், இதனால் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

அப்போது நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டால் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற இடங்களை சீராக 50% உயர்த்தும் திருத்தத்தைக் கொண்டு வர அரசு தயாராக உள்ளது என்றும், இதன் மூலம் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்றும் கூறியிருந்தார். கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டால் புதிய மசோதா காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; முன்மொழிவுகளை எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும். விவாதத்தின் போது திடீரென திருத்தங்களைக் கொண்டு வரக் கூடாது. முந்தைய அனுபவத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கும், மசோதாவில் இருந்ததற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது என்று விமர்சித்தார்.

தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை எதிர்கொள்ள வேறு திட்டத்தைக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரசுக்குள் வளர்ந்து வரும் உட்கட்சி பூசல்களையும், அதிருப்திகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பலத்தைப் பெருக்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது.

மறுபுறம், மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த சில நாட்களிலேயே மமதா பானர்ஜி புதிய பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சியினரை மிரட்டவும் ஒடுக்கவும் அரசியல் அழுத்தங்களை பா.ஜ.க பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மேற்கு வங்கத்தில் டி.எம்.சியை பா.ஜ.க எந்த அளவுக்குத் துன்புறுத்துகிறதோ, அந்த அளவுக்கு புதுடெல்லியில் அவர்கள் பிரச்னைகளைச் சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/centre-aims-to-revive-delimitation-bill-push-joint-polls-by-2029-11895436