திங்கள், 23 நவம்பர், 2026

உலக அளவில் இஸ்லாமியர் மக்கள் தொகை 10% அதிகரிக்கும்:

 source https://tamil.indianexpress.com/international/world-religion-population-forecast-2070-india-muslim-hindu-12833709


வரும் ஆண்டுகளில் உலக மதங்களின் மக்கள் தொகை பரவலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. 2070-ஆம் ஆண்டிற்குள் இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் என பிரபல அமெரிக்க ஆய்வு நிறுவனமான 'பியூ ரிசர்ச் சென்டர்' தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் கணித்துள்ளது. 


நவம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, மக்கள் தொகை வளர்ச்சி வேகம் மற்றும் கருவுறுதல் விகிதத்தில்  நிலவும் வேறுபாடுகளே இந்த வரலாற்று மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

2070-ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை கணிப்பு

தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி போக்கு இதே நிலையில் தொடர்ந்தால், 2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை 29 சதவீதம் அதிகரிக்கும். இதே காலகட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும் நிலையில், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 80 சதவீதம் என்ற அளவிற்கு பன்மடங்கு அதிகரிக்கவுள்ளது.

இதன் விளைவாக, 2070-ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு தற்போதைய 26 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக உயரும். அதாவது உலகளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 3.6 பில்லியனைத் (360 கோடி) தாண்டும். மறுபுறம், கிறிஸ்தவர்களின் பங்கு சுமார் 29 சதவீதமாக, அதாவது 3 பில்லியன் (300 கோடி) அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மதங்களின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள உண்மை காரணம் என்ன?

மத மாற்றங்களை காட்டிலும், அந்தந்த மதங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே இந்த மக்கள் தொகை உயர்விற்கு பிரதான காரணம் என பியூ ரிசர்ச் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. 2020 - 2025 காலகட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 3.1 ஆக உள்ளது. ஆனால், கிறிஸ்தவப் பெண்களிடையே இது 2.5 ஆகவும், பிற மதங்களைச் சேர்ந்தவர்களிடையே 1.6 ஆகவும் மட்டுமே பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பங்கு எப்படி மாறும்?

உலக அளவில் இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 2020- ல் 1.2 பில்லியனாக (120 கோடி) இருந்த நிலையில், 2070-க்குள் அது 1.4 பில்லியனாக (140 கோடி) அதிகரிக்கும். இருப்பினும், உலகின் பிற பகுதிகளின் மக்கள் தொகை இதைவிட வேகமாக வளர்வதால், உலக மக்கள் தொகையில் இந்துக்களின் பங்கு 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக சற்றே குறையும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 17.6 கோடி அதிகரிக்கும். இருந்தபோதிலும், நாட்டின் மொத்த மக்கள் தொகை விகிதத்தில் இந்துக்களின் பங்கு 2020-ல் இருந்த 79.4 சதவீதத்திலிருந்து 2070-க்குள் 75.8 சதவீதமாகக் குறையும். அதே நேரத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களின் பங்கு 15.2 சதவீதத்திலிருந்து 19.6 சதவீதமாக உயரும் என அந்த அறிக்கை கூறுகிறது.

நாடுகள் வாரியாக மாறவுள்ள மக்கள் தொகை ஆதிக்கம்

புவியியல் ரீதியாகவும் உலக மக்கள் தொகை கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் தொகை வளர்ச்சி ஆப்பிரிக்கக் கண்டத்தில் பதிவாகும். அதே சமயம், உலக மக்கள் தொகையில் ஐரோப்பாவின் பங்கு 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சுருங்கும். 2070-ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள கிறிஸ்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சப்-சஹாரா ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa) பகுதிகளில் வசிப்பார்கள்.

மேலும், உலகில் அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக தற்போதுள்ள இந்தோனேசியாவை முந்தி, பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இந்தியா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இருக்கும்.

பௌத்தர்கள் மற்றும் நாத்திகர்களின் நிலை என்ன?

சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்த மக்கள் தொகை சரிந்து வருவதால், பௌத்தர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் அவர்களின் பங்கும் வரும் தசாப்தங்களில் குறையும். இதேபோல், எந்த மதத்தையும் சாராதவர்களின் (மத நம்பிக்கையற்றவர்கள்) பங்கு உலக மக்கள் தொகையில் 24 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாகக் குறையும். எனினும், 2070-க்குள் தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மத நம்பிக்கையற்றவர்கள் பெரும்பான்மையாக மாறுவார்கள் என பியூ ரிசர்ச் கணித்துள்ளது.