source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruparankundram-declared-red-zone-drones-banned-5618-police-deployed-madurai-12835637
/indian-express-tamil/media/media_files/2026/11/23/thirupparankundram-x2-2026-11-23-19-44-50.jpeg)
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) மதுரை மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அப்பகுதிகளில் ட்ரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு முழுமையான தடை விதித்து மதுரை மாநகரக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் உச்சகட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காகச் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 பட்டாலியன் பாதுகாப்புப் படையினர் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். முன்னதாக, தேவைப்பட்டால் துணை ராணுவப் படையை அழைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தற்போது கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதும் 5,618 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகரக் காவல் ஆணையர் தலைமையில், 12 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.க்கள்), 8 ஏ.டி.எஸ்.பி-க்கள், 57 உதவி ஆணையர்கள் மற்றும் 132 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூண், தர்கா, காசி விஸ்வநாதர் கோயில், நெல்லித்தோப்பு மற்றும் மலைப் பாதைகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மட்டும் 1,163 போலீசார் நிறுத்தப்பட்டு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24-ன் கீழ், 23.11.2026 முதல் 24.11.2026 வரை திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நாட்களில் அனுமதி இன்றி ட்ரோன்கள் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





