செவ்வாய், 5 ஜனவரி, 2016

ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது

அதிக மதிப்பு கொண்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண் ஏற்கனவே கட்டாயமாகியுள்ள நிலையில், அவற்றுக்கான சேவை அளிப்பவர்கள் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டியது ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது.

இதுதொடர்பான விரிவான அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 லட்ச ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள பொருள் விற்பனை மற்றும் சேவை அளிப்பவர்கள் படிவம் 61ஏ -வில் விவரங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

வங்கி பிக்சட் டெபாசிட், சொத்து பரிவர்த்தனை, பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஆகியவை குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.

அதன்படி, வங்கிகள், பத்திரப் பதிவு அலுவலகங்கள், பங்குத் தரகு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தபால் நிலையங்கள், நகைக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் ஆகியவை தங்களிடம் அதிக மதிப்பில் பதிவான பணப் பரிவர்த்தனை குறித்த தகவல் அளிக்க வேண்டும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.