சனி, 23 ஏப்ரல், 2016

உலகின் செல்வாக்கான 100 பேர் பட்டியலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ‘ரகுராம் ராஜன்’

உலகிலேயே மிகவும் செல்வாக்கான 100 பேர் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 


உலகிலேயே மிகவும் செல்வாக்கான 100 பேர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டைம்‘ வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது. ரகுராம் ராஜனை பொருளாதார தீர்க்கதரிசி என்று டைம் பத்திரிகை வர்ணித்துள்ளது. 2006ம் ஆண்டு வரை அவர் பன்னாட்டு நிதியத்தில் பணியாற்றிய போது, உலக பொருளாதார பின்னடைவை முன் கூட்டியே கணித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரகுராம் ராஜனை தவிர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, மியான்மர் தலைவி ஆங்சான் சூகி, அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க காத்திருக்கும் குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க இசையமைப்பாளர் லின் மேனுவல் மிராண்டா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.