அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மாணவர் கோஷ்டிகள் இடையே நேற்று கடும் மோதல் நிகழ்ந்தது. இதில் நடந்த தீ வைப்பு, துப்பாக்கிச் சூட்டிற்கு இருவர் பலியாயினர். இதனால், நிலவும் பதட்டம் காரணமாக மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ளது அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம். மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் சம்பல் மற்றும் ஆசம்கர் பகுதிய சேர்ந்த இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது. இது முற்றியதால் பல்கலை வளாகத்தில் உள்ள மும்தாஜ் எனும் மாணவர்கள் விடுதிக்கு வந்த மாணவர்கள் அங்கு அறை எண் 12-ல் இருக்கும் மோசீன் என்பவரை தாக்கியுள்ளனர். இத்துடன் அவரது அறையை சூறையாடி அதற்கு தீ வைத்துள்ளனர்.
இங்கிருந்து உயிர் தப்பிய மோசீன் பல்கலையின் தனிப் பாதுகாவலர் அலுவலகம் வந்து புகார் செய்தார். அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் அங்குள்ள பல்கலையின் தனிப் பாதுகாவலர் ஜீப் மற்றும் இருசக்கரம் உட்பட ஒரு டஜனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இங்கிருந்த பாதுகாவலர்கள் உயிருக்குப் பயந்து ஓடித் தப்பினர். வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு குண்டு காயம் அடைந்த இரு மாணவர்கள் சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், மெஹதாப் எனும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவர், பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
இங்கும் இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை மோதல் நடைபெற்றது. பிறகு அப்பகுதியில் உள்ள சிவில் லைன் காவல் நிலையப் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. இதில், துணைவேந்தர் பங்களா முன் இருந்த சில வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதன் மறுநாளான இன்று, பல்கலைக்கழகத்தின் பொறியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 22,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளை திங்கள் கிழமை மாணவர்கள் கலவரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய பாதுகாப்புப் படையினர் வளாகத்தில் குவிக்கப்பட்டு பதட்டம் நீடிக்கிறது.
குண்டுபட்ட மற்றவரான வாசீப் இப் பல்கலையின் மாணவர் அல்ல. அவரது உயிருக்கும் ஆபத்து நீடிப்பதால் அவர் டெல்லியின் கங்காராம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.