------------------------------------
பார்வை எங்கு இருக்க வேண்டும்?
அஸ்ஸலாமு அலைக்கும்! {வரஹ்} அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவரையும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் இப்பதிவு சந்திக்கட்டுமாக!...
தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.
'தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 750, முஸ்லிம் 649.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். 'ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 751.
'நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?' என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். 'நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமஃமர், நூல்: புகாரீ 746.