வெள்ளி, 29 ஏப்ரல், 2016

37 பேர்கள் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை..
**********************************************************************
மகாராஷ்டிர அரசின் 'பயங்கரவாத எதிர்ப்புப் படை' யால் (ATS) குற்றம் சாட்டப்பட்டு, ஈடு செய்ய இயலாத பெருந் துயரங்களை ஏந்திய ஒன்பது முஸ்லிம்களையும் குற்றமற்றவர்கள் என மகாராஷ்டிர மாநில கோகா (MCOCA) நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
நீதியரசர் வி.வி.படீல் இந்தத் தீர்ப்பை வாசித்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வர்நீதிமன்ற வளாகத்திலேயே குலுங்கி அழுதனர்.
அந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் யார் என நமக்கு இப்போது தெரியும்.
ஆனால் அந்தக் குற்றச் சுமையை சுமந்து ஒரு வாழ்வை இழந்த இவர்கள், இவர்களில் பலர் இளைஞர்கள், என்னென்ன துயரங்களைச் சந்தித்திருப்பர்..
அவர்கள் எத்த்னை சித்திரவதைகளைத் தம் உடம்பிலும் உள்ளத்திலும் தாங்கி இருப்பர்....
எத்தனை ஆண்டுகாலம் சிறைகளில் வாடியிருப்பர்..
வழக்குக்காக அவர்களின் குடும்பங்கள் எத்தனை காசையும், உறங்காத இரவுகளையும் அழித்திருப்பர்...
அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும்..
அவர்களின் வேலைகளும் தொழில்களும் அழிந்திருக்கும்..
அவர்களின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் திருமண வாய்ப்புகள் பறிபோயிருக்கும்...
அவர்களின் குடும்பங்கள் குற்றவாளிகளைப் பெற்றவர்கள் என எத்தனை ஒதுக்கல்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகியிருக்கும்...
அந்த ஒன்பது பேர்களும், அவர்களின் இரத்த உறவுகளும் மட்டுமா இந்தக் குற்றச்சாட்டின் சுமையைத் தாங்கியிருப்பர்? இந்திய முஸ்லிம் சமூகம் முழுமையும் அல்லவா பழிச் சுமையைத் தாங்க வேண்டி இருந்தது.....
சுவாமி அசிமானந்தரின் வாக்கு மூலம்தான் அவர்களை முதன் முதலில் அந்தக் குற்றச் சுமையிலிருந்து விடுவித்தது. "அதைச் செய்தது நாங்கள். இந்துத்துவப் பயங்கரவாதிகள்" என்பதை அந்த மனிதனில் எங்கோ ஒளிந்திருந்த ஈரம் வெளிக் கொணர்ந்தது. ஆனாலும் அதை நமது உயர் புலனாய்வு அமைப்புகளும் நீதிமன்றமும் கணக்கில் எடுத்துக்கொள்ள மேலும் இத்தனை ஆண்டுகள்...
இவர்களின் இழப்புகளை யார் ஈடுகட்டப் போகிறார்கள்?
ஈடுகட்டிவிடத்தான் முடியுமா?
(படத்தில் நீதிமன்ற வாயிலில் அந்த ஒன்பது பேர்களில் சிலர். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ள The Hindu நாளிதழுக்கு நன்றி)