ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று ஏ.டி.எம். செக்யூரிட்டியானவர், ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்துகிறார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம். செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார். செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் அவர் குடிசைவாழ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடமும் சொல்லி கொடுத்து வருகிறார்.
முன்னாள் ராணுவ வீரர் பிரிஜேந்திரா உத்தரகாண்ட் மாநிலம் மாஜ்ராவில் உள்ள அலகாபாத் வங்கி ஏ.எடி.எம். செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் பிரிஜேந்திரா அப்பகுதியில் உள்ள குடிசைவாழ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமான முறையில் பாடம் சொல்லி கொடுக்கிறார். குழந்தைகள் அவரை சுற்றி இருந்து கொண்டு ஆர்வமாக படித்து வருகின்றனர். ஏ.எடி.எம்.மை சுற்றி வசிக்கும் சுமார் 24 குழந்தைகள் அவரிடம் பாடம் படித்து வருகிறது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் சிறந்த முறையில் கற்பித்து கொடுத்து வருகிறார். துவக்கப்பள்ளியின் பாடங்களை பிரிஜேந்திரா நடத்தி வருகிறார். பிரிஜேந்திராவின் செயல்பாடு பள்ளிக்கு செல்லாத குழந்தைகளையும் கவர்ந்து, அவர்களையும் பள்ளிக்கு செல்ல தூண்டி உள்ளது. பிரிஜேந்திராவின் இந்த அர்ப்பணிப்பு தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று உள்ளது. நாட்டிற்காக பாதுகாப்பு பணியில் தன்னை 16-வருடங்கள் அர்ப்பணித்து கொண்ட அவர் தற்போது குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் மிகவும் துள்ளல் ஆர்வம் கொண்டு உள்ளார். படிக்கவரும் குழந்தைகள் யாரிடமும் அவர் பணம் வாங்குவது கிடையாது. மாலையில் அலகாபாத் வங்கி மூடப்பட்டதும் அதனது படியில் விளக்கு வெளிச்சம் உதவியுடன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார். அவருடைய மகத்தான பணி அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அவருடைய இந்நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
“பாதுகாப்பு எனும் பெயரில் பெரும்பாலான நேரம் வெறுமனே அமர்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. குழந்தைகளுக்கு தொடக்க கல்வி பாடங்களை சொல்லி கொடுப்பது ஒன்றும் எனக்கு சிரமம் கிடையாது. என்னிடம் படித்து பல குழந்தைகள் இன்று பல பிரபல கல்லூரிகளில் இணைந்து பயின்று வருகின்றனர்’ என்று சந்தோஷமாக கூறி உள்ளார்.