14 2 2026
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறி அத்துமீறி பறந்த ட்ரோன் ஒன்றை என்.எஸ்.ஜி (NSG) கமாண்டோக்கள் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பாதுகாக்கப்பட்ட வான்வெளியாக (No-fly zone) அறிவிக்கப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே, திடீரென ஒரு ட்ரோன் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி பறந்து வந்தது. அமைச்சர் அமித்ஷா மேடையில் இருந்தபோது, இந்த ட்ரோன் பறந்து வருவதைக் கண்ட NSG கமாண்டோக்கள் உடனடியாக செயல்பட்டனர். ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியைப் (Drone-gun) பயன்படுத்தி, அந்த ட்ரோனை அவர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ட்ரோனை இயக்கிய நபரை போலீசார் உடனடியாகக் கண்டறிந்து பிடித்தனர். விசாரணையில் அவர் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள கடை ஒன்றில் அவர் வேலை செய்து வருவதும், தடை உத்தரவை மீறி ட்ரோனை இயக்கியதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. லோகேஷ் எதற்காக ட்ரோனைப் பறக்கவிட்டார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு 700 புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் 400 மத்திய துணை ராணுவப் படையினர் என சுமார் 1100 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவம் பாதுகாப்பு வளையத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய அத்துமீறலாக பார்க்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/india/security-breach-in-puducherry-drone-shot-down-near-amit-shahs-rally-in-karaikal-by-nsg-commandos-11107282





