இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிஜில் நகரில் இருந்து தென் கிழக்கே 19 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வீடுகள், கடைகள் என அனைத்தும் தரைமட்டமானதால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நில நடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் பெரும்பாலும் சாலைகளிலும், பாதுகாப்பு முகாம்களிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
டெக்டோனிக் அடுக்குகள் அடிக்கடி மோதிக்கொள்ளும் பகுதியான ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கமும், எரிமலை வெடிப்புகளும் நடந்து வருகிறது.
பதிவு செய்த நாள் : December 07, 2016 - 01:23 PM
மாற்றம் செய்த நாள் : December 07, 2016 - 04:30 PM