திங்கள், 5 டிசம்பர், 2016

டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு


-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் அறிக்கை
1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய பிரதமர் திரு. நரசிம்ம ராவ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியான உரையில் உறுதி அளித்தார். பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபரான் ஆணையத்தினால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 1995 முதல் டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களென 51 இடங்களில் தர்ணா போராட்டத்திற்கு அறிவிப்பு விடப்பட்டிருந்தது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலனில் தீடீரென பின்னடைவு ஏற்பட்டு இதன் காரணமாக மக்கள் பெரும் கவலையுடனும் பதட்டத்துடனும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் 51 இடங்களில் பாபர் பள்ளிவாசல் பிரச்னையில் நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தற்போதைய சுகவீனத்திலிருந்து மீண்டு தனது முதலமைச்சர் பணியை மீண்டும் முழு வீச்சில் ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
(ஒப்பம்) பி.எஸ். ஹமீது
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்