திங்கள், 5 டிசம்பர், 2016

அப்போலோவில் கதறி அழுத ஓ.பி.எஸ்..! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?


முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் அமைச்சர் ஓ.பி.எஸ். கதறி அழுததாகவும், 2 நிமிடத்திற்கு மேல் அவரால் பேச முடியாமல் அமர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 நாள் சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வந்த ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. விடிய, விடிய அப்போலோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு லேசான தடியடி வரை சென்றது. இருப்பினும் தொண்டர்கள் கூட்டம் கலைந்து செல்லவில்லை.
அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டும் அப்போலோவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அடுத்து, இன்று காலை 11 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டம் நடத்தப்படுவதாக தலைமை கழகத்திலிருந்து அறிவிப்பு போன் மூலம் சொல்லப்பட்டது. இதனால் வெளியூர்களிலிருந்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் அனைவரும் நேற்று இரவு முதல் அப்போலோ மருத்துவமனையில் ஆஜராகினர். 136 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வந்ததும், அவர்களிடமிருந்த செல்போன்கள் பெறப்பட்டு, கூட்டம் நடந்த அப்போலோ மருத்துவமனையின் மெயின் பிளாக் தரைத்தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, அவர்களிடம் அமைச்சர் ஓ.பி.எஸ் பேசினார்.
அப்போது, "அம்மா, பூரண குணமடைய அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அம்மா விரைவில் குணமடைவார். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அம்மாவின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று பேசி கொண்டு இருந்தபோதே அவரது நாவு தழுதழுத்தது. தொடர்ந்து அவரால் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். இதனால் கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. இதன்பிறகு இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதாவது, ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களின் பேச்சை யாரும் கேட்க வேண்டாம். தலைமை கழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் உங்களுக்கு தகவல் சொல்லுவார். அதற்கு மட்டுமே அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்குப் பிறகு கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்னொரு கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபடக் கூடாது என்பதில் அ.தி.மு.க தலைமை உறுதியாக இருக்கிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள், அனைவரும் நம்பிக்கைக்குரிய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போலோவில் நடக்கும் கூட்டம் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாக உள்விவரங்கள் சொல்கின்றன.