தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு கோடி கோடியாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுத்ததாக பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் பரஸ்மால் லோதா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான பரஸ் மல் லோதா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது, மும்பை விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தமிழகத்தில் 145 கோடி ரூபாய் பதுக்கியதாக கைதான சேகர் ரெட்டி மற்றும் டெல்லியில் 13 கோடி ரூபாய் பதுக்கியதாக சிக்கிய ரோகித் டாண்டன் ஆகியோருக்கு தொழிலதிபர் பரஸ் மல் லோதா நெருங்கிய நண்பர் என்பது அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சேகர் ரெட்டி மற்றும் ரோகித் டாண்டனுக்கு தொழிலதிபர் பரஸ் மல் லோதா சுமார் 25 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் அவரை கைது செய்திருப்பதாக அமலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர் பரஸ் மல் லோதா டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரபல தொழிலதிபரான பரஸ் மல் லோதா, ரியல் எஸ்டேட், சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வெளிநாட்டு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்த பரஸ் மல் லோதா, வட மாநில அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பலருக்கு நெருக்கமானவர்.
December 22, 2016 - 08:31 PM