முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்திலிருந்தே தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
அதாவது ஜெ வின் வெற்றிடத்தை நிரப்பவும் அவரது செல்வாக்கை பயன்படுத்தி கொள்ளவும் பாஜக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதுதான்.
அதற்காகதான் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஜெ. இறந்த நேரத்தில் இங்கு இரண்டு நாட்கள் முகாமிட்டார் என்று சொல்லப்பட்டது.
மேலும் தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வமும் மத்திய ஆளும் பாஜகவின் சாய்ஸ்தான் எனவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கருப்பு பணத்தை பெரிய அளவில் மாற்ற முயன்ற சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு பின்னர் கைது அதனை தோடர்ந்து இந்தியாவே அதிந்து போகும் அளவில் ஆளும் அதிமுக அரசின் தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் ரெய்டு என மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை அதிமுக நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் பல்வேறு தொலைகாட்சிகள் பத்திரிக்கைகள் வாயிலாக அதிமுக முக்கிய நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஓரிடத்தில் கருத்து தெரிவித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆளும் மத்திய பாஜக அரசு ரெய்டு நடத்துவதன் மூலம் தங்களை மிரட்ட பார்க்கிறது என பகிரங்கமாக ஒப்புதல் பேட்டி அளித்துள்ளார்.
இதே போன்று மாற்று கட்சியிலிருந்து வந்து அதிமுகவில் இணைந்த பேராசிரியர் தீரமன், ஜெ. மறைவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளவும் அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை பெறவும் பாஜக நாடகமாடுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக தலைவர்களின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
இது குறித்து பாஜக தரப்பில் கேட்டபோது அதிமுகவை மிரட்ட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லையென்றும் கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாக மட்டுமே ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கபடுகிறது என்றும் பதிலடி கொடுக்கின்றனர்.
மேலும் பாஜக ஒன்றும் மத்தியில் மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை என்றும் ஜிஎஸ்டி மசோதா போன்ற மசோதாக்களை நிறைவேற்றி விட்ட நிலையில் இனி யாருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை எனவும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் எங்களுடைய கட்சியிலேயே உள்ளதால் யாருடைய தயவும் தேவையில்லை உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கிறான் என்றும் எகத்தாளமாக கூறுகின்றனர்.