செவ்வாய், 6 ஜூன், 2017

நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள பண மதிப்பிழப்பு நடவடிக்கை! June 05, 2017


நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள பண மதிப்பிழப்பு நடவடிக்கை!


கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அதிரடியாக ஓரிரவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

Demonetisation எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டு அளவான GDP-யில் எதிரொலித்துள்ளது. கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் GDP கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 %-ஆக குறைந்துள்ளது.

2015-2016ம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஜனவரி-மார்ச்சில் 7.6%-ஆக GDP இருந்தது. 2017-2018 நிதியாண்டின் முதல் காலாண்டான ஜனவரி-மார்ச்சில் GDP 7.1%-ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை கணித்திருந்தது. கடந்த ஆண்டின் இறுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கணிக்கப்பட்டதை விட 1% அளவு GDP சரிவை சந்தித்துள்ளது.

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான வீழ்ச்சி காரணமாக உலகின் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற சிறப்பை இந்தியா இழந்துள்ளது.

கடந்தாண்டு இறுதியில் ஒருநாள் இரவு தொலைக்காட்சியில் திடீரென தோன்றிய பிரதமர் நரேந்திரமோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சியை சேர்ந்தோரும், பொருளாதார வல்லுநர்களுமான மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பொருளாதார வல்லுநர்கள் பலரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்திருந்தனர்.

Rs

பொருளாதார அறிஞர்கள் கணித்தபடியே, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 1 விழுக்காடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குறைந்துள்ளது. முறைசாரா தொழில்களையும் கணக்கில் கொண்டால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் உண்மையான பாதிப்பு இன்னும் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்கூட்டிய கணித்த ஹெச்.எஸ்.பி.சி 

மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த உடனேயே, ஹெச்.எஸ்.பி.சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அடுத்த 12 மாத காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 விழுக்காடு குறையும் என்றும், இத்திட்டம் நீண்ட கால நோக்கில் பலனளிப்பது அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை சார்ந்த ஒன்று!” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிபுணர்களின் கணிப்பு

பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கிட்டத்தட்ட 2 விழுக்காடு அளவு GDP பாதிப்பை சந்திக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். “என்னுடைய கணிப்பின் படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டின் விவசாய உற்பத்தி முறையை பெரிதும் பாதிக்கக் கூடியது. சிறுதொழில் நிறுவனங்களையும், முறைசாரா தொழில் நிறுவன பொருளாதாரத்தையும் முற்றாக பாதிக்கக் கூடியது இந்த நடவடிக்கை. இது GDP-ஐ குறைந்தபட்சம் இரண்டு விழுக்காடு அளவேனும் பாதிக்கும் என்பது என் கணிப்பு” என மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார்.

Rupee

பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியாசென், தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில், “மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தவறான ஒன்று” என கருத்து தெரிவித்திருந்தார். “பணமில்லாத பொருளாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிரானது என்ற இரு நிலைகளிலும் இந்த நடவடிக்கை பலனளிக்கப் போவதில்லை என்பதுடன், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பின்னால் சரியான காரணம் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்ததார்.