ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 7 பேர் கொண்ட பட்டியல் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனின் பதவி காலம் வரும் செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. 2வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக இல்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புதிய ஆளுநரை நியமிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 7 பேர் கொண்ட பட்டியல் பரிசீலனையில் உள்ளதாகவும் அந்த பட்டியலில் தற்பொழுது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக உள்ள ஊர்ஜித் பட்டேல், ராகேஷ் மோகன் மற்றும் முன்னாள் துணை ஆளுநர் சுபிர் கோகர்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், ஆசிய வங்கியின் செயல் இயக்குனராகவும் பணியாற்றிய அசோக் லஹிரி மற்றும் தேசிய பங்கு சந்தையின் தலைவர் அசோக் சாவ்லா ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய முன்னாள் நிதித்துறை செயலாளரான விஜய் கேல்கரின் பெயரும் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் நியமன பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.