திங்கள், 2 ஜனவரி, 2017

இதுதான் புத்தாண்டு - வரும் முன் காப்போம்.




ஒரு குறிப்பிட்ட ஒரு நாளை ஆண்டின் முதல் நாள் என்று முடிவு செய்து; அந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள் சிலர். அந்த நாளில் மேலை நாடுகளில் விழாக்கோலம் கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஒரு ஆண்டு துவங்கினால் அதை வரவேற்க்கிறோம் என்ற பெயரில் இது போன்ற விழாக்கள் தேவையற்றது. ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் ஒவ்வொரு நாளும் புது நாட்கள் தான். தன்னைக் கடந்து சென்ற நாட்களைத் திரும்பப் பெற முடியாத நிலையில் வரும் நாட்களில் தனது கடைமைகளை அழகிய முறையில் செய்தால் அதைச் சிறந்தது எனலாம்.
ஆனால் பல ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்வுகள் மிகவும் மோசமாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளதைப் பார்க்க முடிகிறது.
புத்தாண்டு வந்துவிட்டால் இளைய சமுதாயத்திற்கு போதை தலைக்கேறிவிடும். ஆண்களும் பெண்களும் ஆட்டம் பாட்டம் போடுவதும் மது போதையில் கூத்து கும்மாளம் அடிப்பதுமாகத்தான் உள்ளது.
வாகனத்தில் வாழ்க்கையை இழந்தவர்கள்...
சென்னை போன்ற இடங்களில் அதிகமாக மதுவருந்தி புத்தாண்டைக் கொண்டாடுவதும், வாகனங்களில் புதிய வாழ்க்கை கிடைத்து விட்டது போன்ற எண்ணத்தில் வேகமாக ஓட்டுவதும் அதில் பலர் அகால மரணம் அடைவதுமாகவே கடந்த ஆண்டுகள் சென்றுள்ளன.
- சென்ற 2016 ஆம் புத்தாண்டில் முதல் நாளில் சென்னையில் மட்டும் நடந்த பல்வேறு சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளனர். 128 பேர் காயம் அடைந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- 2015 சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் 83 இடங்களில் விபத்து 53 பேர் காயம், 83 இடங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
- 2014 புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விருந்து, நடன விருந்து, சாலைகளில் ஆர்ப்பரிப்பு என மக்கள் கட்டுக்கடங்காமல் கொண்டாடியதில் 70 இடங்களில் சாலை விபத்துகள் நேர்ந்தன.
இது கடந்து சென்ற ஆண்டுகளில் நடந்த சென்னை விபத்து மட்டும் தான் தமிழ்நாடு முழுமைக்கும் பார்த்தால் மிக அதிகமாக இருக்கும்.
ஒரு நாளில் எப்படி இவ்வளவு விபத்து நடந்துள்ளது என்று பார்த்தால் போதைதான் காரணம். இதில் பெண்களும் அடங்குவர்.
இந்த ஆண்டிலாவது இது போன்று நடப்பதைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-சென்ற ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் 300 இடங்களைக் கண்டறிந்து அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். வழக்கமாக குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார் புத்தாண்டு என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர். சிலரின் உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதுதான் சென்ற ஆண்டு காவல்துறை எடுத்த நவடிக்கை. இது அவர்களை எப்படி திருத்தும்? மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் லைசன்சுகளை கேன்சல் செய்வது, தண்டனைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள்தான் இது போன்ற விபரீத விபத்துகளைத் தடுக்கும்.
காமக்களியாட்டங்கள்-
ஆண்டு துவங்கி விட்டது வாருங்கள். நம் சந்தோசத்தை கடற்கரையிலும், ஓட்டல்களிலும், சினிமா தியேட்டர்களிலும் கேளிக்கை விடுதிகளிலும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம் என்று அதிகமான ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி மது போதையில் ஆட்டம் போடுவதும் காமக்களியாட்டங்களை பொது இடங்களில் அரங்கேற்றுவதும்தான்.
திருமணத்தின் மூலம் பெற வேண்டிய முறையான இன்பத்தை வழி தவறிய முறையில் பெறத் துடிப்பவர்களுக்கு புத்தாண்டு புனிதமாகி விடுகிறது”.
பெற்றோரின் கடமைகள்-
குறிப்பிட்ட நாட்களில் விபரீதங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கும்போது ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் வெளியில் செல்வதைக் கூடுதலாக கண்காணிக்க வேண்டும்.
வெளியூரில் தங்கியுள்ள மாணவர்களிடம் இதுபோல் விபரீதங்கள் நடப்பது அதிகமாக உள்ளது. இதுபோன்று தங்கள் பிள்ளைகளை வெளியூரில் வைத்து இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தடுக்க கடமைப்பட்டவர்கள்-
ஒரு நாளில் கோண்டாட்டம் என்ற பெயரில் இது போன்ற விபரீதங்கள் நடந்து கொண்டு இருப்பதைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை ஊக்கப்படுத்தும் செயலைத்தான் செய்கின்றன.
கடற்கரையில் மற்ற நாட்களில் போடப்படும் கெடுபிடிகள் அந்த நாளில் ஏன் போடுபது இல்லை. போதை ஆசாமிகளுக்கு மற்ற நாட்களில் கிடைக்கும் வழக்கு கூட புத்தாண்டில் கிடையாது. வெறும் அறிவுரை மட்டும்தான். நட்சத்திர ஓட்டலில் நடன விருந்து, காமவிருந்து, போதை விருந்துக்கு என்று அனைத்து கேளிக்கைகளும் நடக்க காவல் துறையே மறைமுக அனுமதி வழங்குகிறது.
கடமை தவறும் மீடியாக்கள்
மீடியாக்களைச் சொல்லவே வேண்டாம், மக்கள் நலன் என்ற பார்வை சிறிதும் இல்லாமல் தங்களின் வருமானத்திற்க்காக அசிங்கங்களையும், ஆபாசங்களையும் ஒளிபரப்பி வருகிறது. அதில் இந்தப்
புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டத்தை ஒளிபரப்புவதைச் சொல்லவே வேண்டாம்.
புத்தாண்டு கேளிக்கைக் கொண்டாட்டத்தில் இந்த அளவிற்கு மக்கள் விழுந்ததற்குக் காரணம் மீடியாக்கள்தான். வெளிநாட்டில் நடக்கும் புத்தாண்டுக் கூத்துகளை ஒளிபரப்பு செய்து மக்களை அதன்பால் கொண்டு வந்தவர்கள் இந்த மீடியாக்கள் தான்.
தற்போது தமிழ் நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மக்கள் கூடி கூத்தடிக்கும் காட்சிகளை லைவ்வாக ஒளிபரப்பு செய்து மக்களின் மனோநிலையை மேலும் மேலும் குலைத்து வருகினறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நன்றி- உணர்வு-