மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி 250க்கு மேற்பட்டோர் மீது தடியடி நடத்தி, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பெரும பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு குடிக்க குடிநீர் இல்லாமலும், உணவு இல்லாமலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழைய மகாபலிபுரம் சாலையில், சிறிது நேரத்துக்கு முன் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் பேரணியாக, மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது, அங்கு சென்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் அமைதி பேரணியாக செல்கிறோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மறுத்த போலீசார், அனைவரையும் கலைந்து செல்லும்படி மிரட்டினர். மாணவர்கள் மறுத்ததால்,அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
ஏற்கனவே அலங்காநல்லூரில் தடியடி நடத்தியதால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. தற்போது மாணவர்கள் மீது மீண்டும் தடியடி நடத்தியுள்ளால், இந்த விவகாரம் பூதாகரமாக மாறும் நிலையில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசு தலையிடாவிட்டால், தமிழகம் முழுவதும் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்திய சுதந்திரத்துக்காக அஹிம்சையில் மகாத்மா காந்தி போராடினார். அதேவேளையில் சுபாஷ் சந்திரபோஸ் என்ற தலைவரும் போராடினார். தற்போது மாணவர்களின் போராட்டம் காந்தி வழியில் செல்கிறது. போலீசாரின் தடியடி நடவடிக்கையால் சுபாஷ் சந்திரபோஸ் பாதைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.