ஞாயிறு, 15 ஜனவரி, 2017

​பாதரச கழிவு தொழிற்சாலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுகிறதா தமிழக அரசு?

​பாதரச கழிவு தொழிற்சாலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுகிறதா தமிழக அரசு?


கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்றும் விவகாரத்தில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செயல்பட்டுவந்த யூனிலிவர் நிறுவனத்திற்கு சொந்தமான தடை செய்யப்பட்ட பாதரச தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை, கடந்த 2001-ஆம் ஆண்டு மூடப்பட்டது. பாதரச நச்சுத்தன்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிறுவனம், தொழிற்சாலையை மூடியது. ஆனால், தொழிற்சாலையில் இருந்த பாதரசக்கழிவுகள் ஆலையின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள சோலை, நட்சத்திர ஏரி போன்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சாலையில் பணிபுரிந்த மேரி கூறுகிறார்.

இதனிடையே, இங்கு பணியாற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 590 பேருக்கு மட்டுமே தொழிற்சாலை நிர்வாகம், கருணை தொகை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு கருணை தொகை வழங்குமாறு, வழக்கு தொடுத்துள்ளனர்.

மூடப்பட்ட தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளை, சர்வதேச தரத்தில் அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது, 1 கிலோ மண்ணில் 0.1 மில்லி கிராம் என்ற அளவிற்கு பாதரசத்தை அப்புறப்படுத்த வேண்டுமென, அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. 

இதற்காக உள்ளூர் கண்காணிப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் 1 கிலோ மண்ணில் 0.20 மில்லி கிராம் அளவிலேயே அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுமென தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாதரச எதிர்ப்புக் கூட்டணி, சர்வதேச அளவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.  
மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சர்வதேச தரத்தில் அகற்றப்பட வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.