பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த கிறிஸ்தவப் பாதிரியார் ஹிலாரியோன் கப்புச்சி, ஜனவரி 1-ல் தனது 94-வது வயதில் மறைந்துவிட்டார். 1922-ல் சிரியாவின் அலெப்போ நகரில் பிறந்த கப்புச்சி, 1965-ல் ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்தின் ஆர்ச் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். பாலஸ்தீனர்களின் உரிமைப் போராட்டம் பற்றியும், இஸ்ரேல் நடத்திய மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதிவந்த அவர் மீது, மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்துக்குப் பெரும் மரியாதை இருந்தது. இது இஸ்ரேலின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது.
மதத் தலைவர் என்பதால் லெபனான் - இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து சுதந்திரமாகப் பயணம் செய்ய அவருக்கு அனுமதி இருந்தது. 1974 ஆகஸ்ட் 8-ல் நாசரேத் நோக்கிப் பயணம் செய்த அவர், ஜெருசலத்தில் வைத்து இஸ்ரேல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அவர் சென்ற காரில் ரஷ்யத் தயாரிப்பான கலாஷ்னிகோவ் ரகத் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து விடுதலை செய்யப்பட்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இந்த முறை தங்கம், விஸ்கி, தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கடத்தினார் என்றும், ஜெருசலத்தின் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தும் சதியில் ஈடுபட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இஸ்ரேலில் கிறிஸ்தவ மதத் தலைவர் ஒருவர் மீது வைக்கப்பட்ட அதிகபட்சக் குற்றச்சாட்டு இது. "கப்புச்சி கைதுசெய்யப்பட்டது மாபெரும் குற்றம்" என்றார் அராபத். "மிகுந்த வருத்தம் தரும் செய்தி" என்றது வாடிகன். அவரை விடுதலை செய்யக் கோரி உலகமெங்கும் குரல்கள் எழுந்தன. எனினும், இஸ்ரேல் அசைந்துகொடுக்கவில்லை. 1974 டிசம்பர் 9-ல் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம். இயேசு மட்டும் இப்போது உயிருடன் இருந்தால் எனக்காகக் கண்ணீர் சிந்தியிருப்பார் என்று சொன்னார் கப்புச்சி.
1976 ஜூன் 28-ல் டெல் அவிவிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் பாலஸ்தீனப் போராளிக் குழுவும், ஜெர்மனி விடுதலைக் குழுவும் அடங்கிய குழுவினரால் கடத்தப்பட்டது. இடி அமீன் அதிபராக இருந்த உகாண்டாவின் எண்டபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பணயக் கைதிகளை விடுவிக்க, கப்புச்சியையும் பாலஸ்தீன ஆதரவுக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றனர் கடத்தல்காரர்கள். ஆனால், இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக எண்டபிக்குள் நுழைந்து பணயக் கைதிகளை மீட்டதால், கப்புச்சி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை.
ஒருவழியாக, வலதுசாரிக் கட்சியான லிகுட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், போப்பாண்டவர் முறையாக கோரிக்கை விடுத்தால் கப்புச்சியை விடுவிப்போம் என்றது இஸ்ரேல். போப் கோரிக்கை விடுத்ததையடுத்து, 1977 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னரும் வாடிகன் எரிச்சலடைந்தாலும் தொடர்ந்து பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தார். 1979-ல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டபோது, அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பையும் கண்டித்தார். 2010-ல் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க காஸா சென்ற கப்பலில் அவரும் பயணம் செய்தார்.
மத வேறுபாடுகளைத் தாண்டி, மனித உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த கப்புச்சியின் குரல் ஓய்ந்துவிட்டது!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.