ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநில அரசும் அவசர சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதனையடுத்து, போலீசார் தரப்பில் போராட்டங்களை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து மெரீனா போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. ஆனால், போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் இழுத்து வெளியேற்றினர்.
இதனையடுத்து, வெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள் திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் பேரணியாகத் திரண்டனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர், போராட்டக்காரர்கள் காவல் நிலையத்துக்கும் வாகனங்களுக்கும் தீவைத்து எரித்ததாக வீடியோவும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
இதனை மறுக்கும் வகையில், தற்போது சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் சங்கர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த வன்முறை வெறியாட்டம் குறித்து அவர் விளக்குகையில், வீடியோ ஆதாரம் காண்பிப்பதாக அவர் கூறி சில வீடியோக்களை காண்பித்தார்.
ஆனால், அவர் காண்பிக்க முயற்ச்சிக்கும் வீடியோக்களில் வன்முறையாளர்கள், சமூக விரோதிகள் யாரையும் காண்பிக்க முயலவில்லை. மேலும் மாற்றி மாற்றி வீடியோவை பிளே செய்து சொதப்பலில் ஈடுபட்டனர்.
முன்கூட்டியே தயார் செய்த வீடியோவை காண்பிக்க இவ்வளவு சொதப்பலாக செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களையும் நேரத்தை வீணடித்தனர். ஏன் இந்த நிலைமை காவல் துறைக்கு என்று மீடியாக்களிடையே சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.





