புறக்கணிக்கப்படும் தமிழகம்..

கிடப்பில் போடப்படும் கீழடி அகழாய்வுப் பணி...
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த கீழடி அகழாய்வுப் பணியை தொடர்வதற்கான அனுமதியை மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ளது.
குஜராத்தின் தோலாவீராவில் 13 ஆண்டுகளும், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் 10 ஆண்டுகளும், குஜராத்தின் லோத்தல், உ.பியின் அகிசித்ராவில் ஆறு ஆண்டுகளும், உத்தரப் பிரதேசத்தின் சிருங்கவீர்பூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகவும் அகழாய்வைச் செய்தவர்கள், கீழடியில் மட்டும் இரண்டே ஆண்டுகளில் அகழாய்வை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ராஜஸ்தானின் காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவற்றுள் 28 பொருட்களின் மாதிரிகளை 'கார்பன்-14' ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தோலாவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியும், கிரிசராவில் இருந்து 15 பொருட்களின் மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், கீழடியில் எடுக்கப்பட்ட மூலப்பொருள் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான் 'கார்பன்-14' பகுப்பாய்வுக்கு அனுப்ப தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில், வெறும் 15%க்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம்தான், கீழடியில் கிடைத்துள்ள இரண்டு மாதிரிகளை மட்டும் கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பினால் போதும் என்று வெறும் ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
கீழடியில் கிடைத்துள்ள 5,300 தொல்பொருட்களில் எந்த மத அடையாளம் சார்ந்த பொருள் எதுவுமில்லை. பெருமதங்களின் ஆதிக்கம் உருவாகாத ஒருகாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நாகரிகத்தின் எச்சங்கள் இவை. இங்கு அகழாய்வைத் தொடரவைப்பதும் அவ்வடையாளங்களைப் பாதுகாப்பதென்பதும் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தம்மிக்க பண்பாட்டுச் சாரத்தைப் பாதுகாக்க எத்தனிப்பதாகும். என்ன செய்யப் போகின்றன தமிழகத்தின் அரசியல் கட்சிகள்?
-சு.வெங்கடேசன், 'காவல் கோட்டம்' நாவலாசிரியர்