சனி, 14 ஜனவரி, 2017

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் ‘மோடிக்கு ஜே’ கோஷம் போட்டது யார்?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோது, ”மோடிக்கு ஜே, பாரத் மாதாகீ ஜே” என்ற கோஷம் நீண்ட நேரம் ஒலித்தது. இவ்வாறு கோஷம் போட்டவர்கள் யார் என பெங்களூரு போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய வெளியுறவுத் துறை மற்றும் கர்நாடக அரசின் சார்பாக 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு கடந்த 3 தினங்களாக‌ பெங்களூரு சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியை சேர்ந்த போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அன்டோனியா கோஸ்டா, சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் அதின், ம‌த்திய அமைச்சர்கள் வி.கே. சிங், அனந்தகுமார், கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, முதல்வர் சித்தராமையா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், 8 மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
72 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், பல்வேறு மாநில முதலீட்டாளர்கள் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அன்டோனியா கோஸ்டா, ம‌த்திய அமைச்சர் அனந்தகுமார், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் பேசும்போது கூட்டம் அமைதியாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு எழுந்தபோது, ”மோடிக்கு ஜே, பாரத் மாதாகீ ஜே” என அரங்கத்தில் ஆங்காங்கே சிலர் உரத்த குரலில் கோஷம் போட்டனர். சுமார் 3 நிமிடங்கள் வரை நீண்ட கோஷத்தின்போது ஆங்காங்கே சிலர் விசில் அடித்தும், கைகளைத் தட்டியும் ஆராவாரம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மோடி, சிரித்த முகத்துடனே சிறப்புரையை தொடர்ந்தார். மேலும் மோடி கறுப்பு பணம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குறித்தும் விமர்சித்தபோது கூட்டத்தில் தொடர்ந்து கோஷம் எழுந்தது.
இறுதியாக மோடியும், சித்தராமையாவும் கூட்டத்தினரை நோக்கி கையசைத்த போது, பலரும் மோடியை வாழ்த்தியே கோஷமிட்டனர். இதனை சித்தராமையா, கர்நாடக அமைச்சர்கள் தேஷ்பாண்டே, பிரியங்க் கார்கே, ஜார்ஜ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரசிக்கவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களும், எம்பிக்களும், மோடி ஆதரவாளர்களும் முறைக்கேடாக நுழைந்து இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர் என தெரிவித்தனர்.
இந்துத்துவா அமைப்புகளின் வேலை
இதையடுத்து கர்நாடக உள்துறை அமைச்சகம் ‘மோடிக்கு ஜே’ என கோஷம் போட்டவர்கள் தொடர்பாக ரகசிய அறிக்கை அளிக்கும்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெங்களூரு போலீஸாருக்கு ஆணையிட்டது. போலீஸார் விசாரித்த போது, ”வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு இணைய தளம் மூலமாக 10 நாட்களுக்கு முன்பே கட்டணம் பெறப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி மாநாடு தொடங்கிய போது பெங்களூரு அரசியல் பிரமுகர்கள் அவ்வளவாக கூட்டத்துக்கு வரவில்லை.
மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதையொட்டி 300-க்கும் மேற்பட்டோர் திடீரென காலையிலே வந்து அரங்கத்தை முற்றுகையிட்டனர். குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி, எம்எல்ஏக்களும், அவர்களின் ஆதரவாளர்களும், ஆர்எஸ்எஸ்,விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகளும் வந்து அடையாள அட்டை கேட்டு தொந்தரவு செய்தனர். இதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மத்திய வெளியுறவுத் துறையும், கர்நாடக அரசும் முதலில் மறுத்தது.
ஒரு கட்டத்தில் கர்நாடகாவை சேர்ந்த ம‌த்திய அமைச்சர்களிடம் இருந்து வாய்மொழி உத்தரவு வந்ததை தொடர்ந்து உள்ளூர் பாஜகவினருக்கும், இந்துத்துவா அமைப்பினரும் புகைப்படம் இல்லாத அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மோடி கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் நுழைந்தனர். அரங்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள், இந்திய முதலீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என பிரிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் போய் இந்துத்துவ அமைப்பினர் அமர்ந்துக்கொண்டனர்.
மோடி மேடையில் பேச ஆரம்பித்த உடன் ‘மோடிக்கு ஜே, பாரத் மாதாகீ ஜே’ என கோஷம் போட்டதுடன், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கேலி செய்யும் வகையில் வித்தியாசமான ஒலியையும் எழுப்பியுள்ளனர். இதனால் பிற சிறப்பு அழைப்பாளர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்துத்துவா அமைப்பினரின் இந்த செயலை காங்கிரஸாரும், இந்திய முதலீட்டாளர்களும் கூட ரசிக்கவில்லை. இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரின் வாக்குமூலம்,பத்திரிகையாளர்களின் செய்திகள் மற்றும் வீடியோ பதிவுகள் ஆகியவை ஆதாரமாக கிடைத்திருக்கிறது. இதனை விரைவில் கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைப்போம்” என்றனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் முறைக்கேடாக நுழைந்த‌ இந்துத்துவா அமைப்பினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் பெங்களூரு போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.