அரியானாவில் நடந்த ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ‘ஷூ’ வீசப்பட்டது. இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரியானா மாநிலம் ரோதக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை கண்டித்து அவர்கள் பேசினர். குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ரூ. 65 கோடி லஞ்சம் பெற்றார் என சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
அதே குற்றச்சாட்டை மீண்டும் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு முன்னரே பாஜகவினர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை ரியஸ் எஸ்டேட் உள்பட பல்வேறுதொழில்களில் முதலீடு செய்துவிட்டனர் என்றார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர், கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசினார். ஆனால் அந்த ஷூ அவர் மீது விழவில்லை. உடனே ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த விகாஷ் (26). பட்டதாரியான அவர், வேலை எதுவும் இன்றி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியதால் அவர் ஷூ வீசியது தெரிந்தது. இதற்கிடையே இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடிதான் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “பிரதமர் மோடி ஒரு கோழை என்று நான் ஒருமுறை கூறினேன். என்னுடைய வார்த்தையானது இப்போது நிரூபனம் ஆகிவிட்டது. என்னை எதிர்க்கொள்ள பிரதமர் மோடியிடம் தைரியம் கிடையாது. எனவே தான் என் மீது ஷூ க்களை வீச அவருடைய ஷூக்களை அனுப்பியுள்ளார்,” என்று குற்றஞ்சாட்டினார்.