சனி, 25 மார்ச், 2017

2024ம் ஆண்டிற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என சுப்பிரமணியன் சுவாமி அறிவிப்பு!

2024ம் ஆண்டிற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என சுப்பிரமணியன் சுவாமி அறிவிப்பு!


24/3/2017, 2024ம் ஆண்டிற்குள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என பாஜவின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி அறிவித்துள்ளார்.

பாஜக தலைவரால் நடத்தப்பட்ட ‘திரங்க யாத்ரா’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்து மற்றும் இஸ்லாமிய ஆகிய இரு தரப்பு கருத்துக்களை கேட்டால் ராமர் கோயிலை ஒருபோதும் கட்ட முடியாது எனத் தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவது குறித்து பல்வேறு இஸ்லாமிய தலைவர்களுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை எனவும் அவர் கூறினார்.

இப்பொழுது மக்களவையில் மட்டுமே பாஜகவிற்கு பெரும்பான்மை உள்ளது, ராமர் கோவில் கட்டும்  சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை தேவை, எனவே 2018ம் ஆண்டு மக்களவையிலும் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்துவிடும். அதன்பிற்கு 
ராமர் கோவில் கட்டுவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலங்களவைவில் சட்டமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். எனவே  2024ம் ஆண்டிற்குள் கண்டிப்பாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

மேலும் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்கள், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீது உள்ள கோரிக்கையை கைவிட்டுவிட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ராம பக்தர்களுடன் உதவ வேண்டும் என கூறினார்.  ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அயோத்தியில் உள்ள சராயு நதி அருகே மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு சிறிது இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா, காசி மற்றும் அயோத்தி ஆகிய மூன்று சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேறவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.