ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3800 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வேப்பம்குப்பம் தீஞ்சமலைகாடு நெக்கினிமலை கிராமத்தில் கள்ளச்சாராயம் இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேப்பம்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் அப்பாசாமி தலைமையில் போலீசார் நெக்கினிமலை கிராமத்தில் ஆத்துஒடை அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மறைவான பகுதியில் கள்ளச்சாராயம் தயார் செய்து கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அங்கு 2450 லிட்டர் சாராயம், 1 அடுப்பு, 16 மூட்டை கடுக்காய், 150 கிலோ வெல்லம், 6 சீமை கருவேலபட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் அதே பகுதியில் துரைசாமி என்பவர் வீட்டில் லாரி டியூப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருருந்த 600 லிட்டர் எரி சாராயம், அதே பகுதியை சேர்ந்த சின்னையன் என்பவரிடமிருந்து 600 லிட்டர்சாராயம் 700 ரூபாய் ரெக்கம் மற்றும் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை கைபற்றி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வேப்பங்குப்பம் ,ஒடுக்கத்தூர் , வாணியம்பாடி, மாதகடுப்பா , உமராபாத் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் , இதற்கு கலால் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அவர்களின் ஆதரவுடன் நடைபெற்று வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.