செவ்வாய், 14 மார்ச், 2017

உஷார்… நகையை அடகு வைக்க போறீங்களா? – ரிசர்வ் வங்கி வைக்கும் புது ஆப்பு

தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைகை அடகு வைக்கும் போது, ரூ. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை பணமாக கொடுக்காமல், அதை காசோலை அல்லது அடகு வைப்பவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூபாய் நோட்டு தடைக்கு பின், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தை தீவிரப்படுத்தும் முயற்சியாக ரிசர்வ் வங்கி உத்தரவித்துள்ளது.
இதற்கு முன் தனியார் நிதி நிறுவனங்களில் நகையை அடகு வைக்கும் போது, அதிகபட்சமா ரூ. ஒரு லட்சம் வரை ரொக்கப்பணமாக அடகு வைப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதை ரூ. 20 ஆயிரமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
 

இதனால், இனிமேல், முத்தூட், மணப்புரம் கோல்டு லோன், உள்ளிட்ட தனியார் நிதிநிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும்போது ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் செல்லும்போது, அதை காசோலையாகவோ அல்லது வங்கிக்கணக்கில் மட்டுமே பெற முடியும்.
இது குறித்து முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். கண்ணண் கூறுகையில், ” இதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் நகை அடகு வைத்தால், அடகு வைப்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை ரொக்கமாகப் பெறலாம். ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்குப்பின்,இனி ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாகக் கொடுப்போம்.
இதனால், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நகை அடகு வைப்பவர்கள் வேறு வழியின்றி டிஜிட்டலுக்கு மாறித்தான் ஆக வேண்டும். இனிமேல் வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் நகை அடகுவைத்தால், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணம் பெறுவது கடினம்” எனத் தெரிவித்தார்.