
அசாம் மாநிலத்தில் மணல்திட்டாக இருந்த பகுதியில், தனி மனிதரின் முயற்சியால் ஒரு காடு உருவாக்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகாலமாய் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் அருகே வசிக்கும் மிசிங் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஜாதவ் பயேங். 53 வயதான இவர் அப் பகுதியில் 1,360 ஏக்கர் பரப்புள்ள ஒரு மணல்திட்டை காடாகச் செழித்து வளர்த்துள்ளார்.
பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒற்றை மனிதனாக ஒரு காட்டை உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்த இவரை, ஒரு காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. என்றாலும் இவர் உருவாக்கிய காடு தற்போது இவருடைய மரங்கள் வளர்ப்பின் மீதான தீரத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

1970-களில் அருணா சபோரி எனும் தீவில் சமூகக் காடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டார் பயேங். அந்த பணி தடைபட்டு நிறுத்தப்பட்ட பின்னரும், கோகிலாமுக் பகுதியில் காடு வளர்க்கும் பணியில் தனி மனிதனாக ஈடுபட்டார்.
இளமை காலத்தின் பெரும்பகுதியை மரம் வளர்ப்பதில் செலவிட்ட ஜாதவ் பயேங்கின் சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 'இந்தியாவின் காட்டு மனிதன்’ என்று பட்டம் வழங்கி சிறப்பித்தது. இவரை பிழைக்கத் தெரியாதவர் என்று கூறியவர்கள் எல்லாம் 2015-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்த போது வாய் பிளந்து ஆச்சர்யமடைந்தனர்.

ஜாவேத் பாயேங் எனும் தனி மனிதனின் முயற்சியால் விளைந்த காட்டில் இன்று ஆயிரக்கணக்கான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்தப் பூமியைக் காப்பாற்ற ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி நம் எல்லோரின் மனதிலும் இருக்கும் வரை ஜாதவ் பயேங் போன்றவர்கள் நிகழ்த்தும் அற்புதங்கள் கூட வெளி உலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படுவதில் வியப்பில்லைதான்.