இந்தியாவில் கிராமங்களில் வசிக்கும் 6.3 கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் இல்லை என்று புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலக தண்ணீர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘வாட்டர்எய்ட் இந்தியா’ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடும் வேளையில் இந்தியாவில் கிராமங்களில் வசிக்கும் 6.3 கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் இல்லை. இந்த மக்கள் தொகை இங்கிலாந்து மக்கள் தொகைக்கு சமம்.
மேலும், உலக அளவில் 66.3 கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் இல்லை, இதில் பெரும்பாலும் கிராமங்களில் மட்டும் 52.2 கோடி பேர் வசிக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காததால், காலரா, மலேரியா, டெங்கு, போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால், விவசாயம் செய்யவும், கால்நடைகளுக்கு தீவனம் கொடுப்பதிலும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக வறட்சி காலத்தில் பெண்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீரை எடுக்க நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
உலகில் வேகமான பொருளாதாரத் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கும் நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு போதுமான குடிநீர் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
அரசின் முறையற்ற திட்டமிடல், மக்களின் தேவையை புரிந்து கொள்ளாதது, அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வேளாண் நடவடிக்கையால் தண்ணீர் தேவை அதிகரிப்பு ஆகியவை நீர் பற்றாக்குறை ஏற்பட காரணம்.
மத்திய அரசின் நிலத்தடி நீர் வளங்கள் ஆய்வு அறிக்கையின்படி, உலகில் ஆறுநாடுகளில் ஒரு நாடு நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக மத்திய வடஇந்தியாவின் பந்தேல்கண்ட் மண்டலத்தில் வறட்சி கடுமையாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலவிய வறட்சியால் லட்சக்கணக்காண மக்களை பசியிலும் வறுமையிலும் சிக்க வைத்து விட்டது.
இது குறித்து வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வி.கே. மாதவன் கூறுகையில், “ நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 27 மாநிலங்கள் பருவநிலை மாற்றம், மோசமான பருவநிலையால் பாதிக்கப்பட்டு பேரழிவில் இருக்கிறார்கள். தண்ணீர் தினத்தன்று, மக்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.